மகா கும்பமேளா: அசைவம் சாப்பிடாத, நன்னடத்தை காவலர்கள் தேவை!
பிரயாக்ராஜ்: வரும் 2025ஆம் ஆண்டு மகா கும்பமேளா நடைபெறவிருப்பதை முன்னிட்டு, நிகழ்ச்சியின்போது பணியில் இருக்க அசைவம் சாப்பிடாத, நன்னடத்தைக் காவலர்களைத் தேடும் பணியில் இறங்கியிருக்கிறது மேளா காவல்துறை.
கங்கை நதிக்கரையில் வெகு சிறப்பாக நடைபெறும், உலகிலேயே மிகப்பெரிய மத வழிபாடான மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதுமிருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மகா கும்பமேளாவை மிகச் சிறப்பாக நடத்தும் வகையில், மேளா காவல்துறையினர், தகுதியான காவல்துறையினரைத் தேடிவருகிறார்கள்.
குறிப்பாக, அசைவம் சாப்பிடாத, நன்னடைத்தை உடைய, இளமையான, திறமையான, துடிப்புடன் இருக்கும், மென்மையாக பேசும் காவலர்களை மகா கும்பமேளா பணியில் அமர்த்தும் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கும் இந்த மகா கும்பமேளாவில் காவல் பணியாற்ற, கடந்த 2019ஆம் ஆண்டு மகா கும்பமேளாவில் பணியாற்றிய காவலர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவெளியில் மக்களை கையாள்வது, மக்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக புகார்கள் இல்லாமல் இருப்பது உள்ளிட்டவை, காவலர்களுக்கான நன்னடைத்தையாகப் பார்க்கப்படுகிறது.
நாட்டின், பிரயாக்ராஜ், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய நான்கு நகரங்களின் ஆற்றுப்படுகைகளில் இந்த கும்பமேளா விழாவானது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நகரில் நடைபெறும். இதில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா மிகவும் பிரசித்தி பெற்றது.
திரிவேணி சங்கமம் என்பது கங்கை, யமுனை மற்றும் கண்ணுக்குப் புலப்படாத சரஸ்வதி நதியும் ஒன்றுகூடும் இடமாகும்.
2025ஆம் ஆண்டு சங்கமம் நகரில் மகா கும்பமேளா நடைபெறவிருப்பதை முன்னிட்டு, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவுப்படி, நகரை அழகாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்காக ரூ.6,800 கோடியை உ.பி. அரசு ஒதுக்கியிருக்கிறது. கடந்த 2019 மகா கும்பமேளாவில் 24 கோடி பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். வரும் 2025 மகா கும்பமேளாவுக்கு 40 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.