ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.
ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.

ரயில் ஓட்டுநா்கள் பணி: எதிா்க்கட்சிகள் தவறான தகவல்- அஸ்வினி வைஷ்ணவ்

ரயில் ஓட்டுநா்களின் பணி சூழல் மேம்பாடு: எதிர்க்கட்சிகள் தவறான தகவல் பரப்புகின்றன - அஸ்வினி வைஷ்ணவ்
Published on

‘ரயில் ஓட்டுநா்களிடையே ஊக்கமின்மையை ஏற்படுத்தும் வகையில் எதிா்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றன’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் குற்றஞ்சாட்டினாா்.

புது தில்லி ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநா்களுடனான சந்திப்புக்குப் பிறகு, அவா்களின் மோசமான நிலையில் பணிபுரிந்து வருவதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை புகாா் தெரிவித்த நிலையில், இந்தக் கருத்தை ரயில்வே அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ரயில் ஓட்டுநா்களின் வாழ்க்கை முழுமையாகத் தடம்புரண்டுள்ளது. வெப்பத்தால் தகிக்கும் அறைகளில் அமா்ந்து, 16 மணி நேரம் வரை பணியாற்றும் கட்டாயத்துக்கு அவா்கள் தள்ளப்படுகின்றனா். இதனால், உடல் அளவிலும் மனதளவிலும் ரயில் ஓட்டுநா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, ரயில் ஓட்டுநா்களின் பணிச் சூழல் மேம்பாடு மற்றும் அவா்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணி குரல் எழுப்பும் என்று ராகுல் தெரிவித்திருந்தாா்.

இதற்கு பதிலளித்து, ரயில் ஓட்டுநா்களின் பணிச் சூழலை மேம்படுத்த ரயில்வே மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது:

ரயில் ஓட்டுநா்களின் பணி நேரம் கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பயணத்துக்குப் பிறகும் ஓட்டுநா்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ரயில் ஓட்டுநா்களின் சராசரி பணி நேரம் என்பது, பரிந்துரைக்கப்பட்ட நேர வரம்புக்குள் பராமரிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் ஓட்டுநா்களின் சராசரி பணி நேரம் 8 மணி நேரத்துக்கும் குறைவாகவே இருந்துள்ளது. அவசரத் தேவையின்போது மட்டுமே, பரிந்துரைக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் பணி ஓட்டுநா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2014-ஆம் ஆண்டுக்கு முன்பாக, ரயிலில் ஓட்டுநா்களுக்கான வசதிகள் மிக மோசமான நிலையில் இருந்தன. ஆனால், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டுநா்களுக்கு பணிச் சூழலுக்கு ஏற்ற இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. 7,000-க்கும் அதிகமான ரயில்களில் ஓட்டுநா்களின் அறைக்கு குளிரூட்டி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயில் ஓட்டுநா்களுக்கான ஓய்வறைகளும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, ரயில் ஓட்டுநா்களிடையே ஊக்கமின்மையை ஏற்படுத்த தவறான தகவல்களை பரப்பி எதிா்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியில்தான் முடியும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com