உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாலங்களின் பாதுகாப்புத் தன்மையை ஆராய்ந்ததில் 83 பாலங்கள் பயன்பாட்டுக்கு தகுதியற்றவையாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிகார் மாநிலத்தில் கடந்த 3 வாரங்களில் 13 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் 50 ஆண்டுகள் பழமையான பாலங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 41 மாவட்டங்களில் உள்ள வாகனங்கள் இயக்கப்படும் 700 பாலங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், பாதுகாப்பற்றவையாக கண்டறியப்பட்டுள்ள 83 பாலங்களில் பொதுமக்களுக்கு தடை விதிப்பது அல்லது கனரக வாகனங்களுக்கு தடை விதித்து போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் பிரஜேஷ் சிங் கூறியதாவது:
“சீரமைக்கப்பட வேண்டிய பாலங்களை கண்டறிந்துள்ளோம். அந்த பாலங்களை கண்காணித்து வருகிறோம். தொடர்ந்து பழுது பார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பயன்பாட்டு முற்றிலும் தகுதியற்றவையாக கண்டறியப்பட்டுள்ள பாலங்களில் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
83 பாலங்களில் தலைநகர் லக்னெளவில் கோமதி மற்றும் சாய் ஆறுகளின் மீது கட்டப்பட்டுள்ள 2 பாலங்களும் அடங்கும். அதிகபட்சமாக கான்பூர் தேஹட் மாவட்டத்தில் 7 பாலங்கள் சீரமைக்கப்பட வேண்டியதாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.