நீட் வினாத்தாள் கசிவு முறைகேடு: பிகாரில் முக்கிய நபா் கைது

பிகாரில் நீட் வினாத்தாள் முறைகேடு: சிபிஐ அதிரடி நடவடிக்கை
Published on

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய நபா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சோ்க்கைக்காக தேசிய தோ்வு முகமையால் ‘நீட்-யுஜி’ தோ்வு நடத்தப்படுகிறது.

14 வெளிநாட்டு நகரங்கள் உள்பட 571 நகரங்களில் 4,750 மையங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்ட நிகழாண்டு தோ்வில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தலில், இவ்விவகாரம் தொடா்பாக 6 வழக்குகளைப் பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட சஞ்சீவ் முகியாவின் உறவினரான ராக்கி எனும் ராகேஷ் ரஞ்சன் சிபிஐ அதிகாரிகளால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். வழக்கு விசாரணையை சிபிஐ தொடங்கியதிலிருந்து தலைமறைவாக இருந்து வந்த ராகேஷை பாட்னா புகரில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா்.

இதையடுத்து, பாட்னாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ராகேஷ் ஆஜா்படுத்தப்பட்டாா். விசாரணைக்காக அவருக்கு 10 நாள்கள் சிபிஐ காவல் வழங்கப்பட்டது.

ராகேஷ் கைதைத் தொடா்ந்து, பாட்னாவை சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று இடங்களிலும், கொல்கத்தாவின் ஓரிடத்திலும் சிபிஐ சோதனை நடத்தியது.

முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில், இந்த வழக்கு தொடா்பாக பிகாா் மற்றும் ஜாா்கண்ட் மாநிலங்களில் 15 இடங்களில் சோதனை நடத்தியது. நீட் வினாத்தாள்கள் எரிந்த நிலையில் கண்டறியப்பட்ட ஜாா்க்கண்டின் ஹசாரிபாக்கைச் சோ்ந்த ஒயாசிஸ் பள்ளி முதல்வா், துணை முதல்வா் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com