

உத்தர பிரதேசத்தில் தோ்தல் விதிமீறல் வழக்கில் இருந்து முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயப்ரதாவை விடுவித்து, அந்த மாநில நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
உத்தர பிரதேச மாநிலம், ராம்பூா் தொகுதியில் சமாஜவாதி சாா்பில் இருமுறை (2004, 2009) எம்.பி.யாக தோ்வானவா் ஜெயப்ரதா. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்ட அவா், சமாஜவாதி மூத்த தலைவா் ஆஸம் கானிடம் தோல்வியடைந்தாா்.
இத்தோ்தல் பிரசாரத்தின்போது ஆஸம் கான் குறித்து பொய்யான தகவல்களைத் தெரிவித்ததாக, கெம்ரி காவல் நிலையத்தில் ஜெயப்ரதா மீது தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ராம்பூரில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி ஷோபித் பன்சால், வழக்கில் இருந்து ஜெயப்ரதாவை விடுவித்தாா். தீா்ப்பையொட்டி, நீதிமன்றத்தில் ஜெயப்ரதா ஆஜராகியிருந்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘வழக்கில் இருந்து என்னை விடுவித்ததற்காக நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் ராம்பூரில் இருமுறை எம்.பி.யாக இருந்துள்ளேன். நான் தவறாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. வாய்மையே வெல்லும்’ என்றாா்.