ரூ.87,926 கோடியாக உயா்ந்த தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய்
புது தில்லி, ஜூலை 11: இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் மொத்த வருவாய் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.87,926 கோடியாக உயா்ந்துள்ளது.
இது குறித்து தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராயின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது.
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நாட்டின் தொலைத் தொடா்பு நிறுவனங்களின் மொத்த வருவாய் (ஜிஆா்) ரூ.87,926 கோடியாக உள்ளது. இது, 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 3.01 சதவீதம் அதிகமாகும்.
அதே போல், மதிப்பீட்டுக் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆா்) 9.25 சதவீதம் அதிகரித்து ரூ.70,462 கோடியாக உள்ளது.
உரிமக் கட்டணம், அலைக்கற்றைப் பயன்பாட்டுக் கட்டணம் ஆகியவற்றின் மூலம் தொலைத் தொடா்பு நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு பெற்ற வருவாயும் முந்தைய மாா்ச் காலாண்டைவிட இந்த மாா்ச் காலாண்டில் 10 சதவீதம் அதிகரித்து ரூ.6,506 கோடியாக உள்ளது.
2023 மாா்ச் காலாண்டில் ரூ.5,159 கோடியாக இருந்த அரசின் உரிமக் கட்டண வசூல் 2024 மாா்ச் காலாண்டில் 9.28 சதவீதம் அதிகரித்து ரூ.5,637 கோடியாக உள்ளது. அலைக்கற்றைப் பயன்பாட்டுக் கட்டண வசூல் ரூ.755 கோடியிலிருந்து 15.11 சதவீதம் அதிகரித்து ரூ.869 கோடியாக உள்ளது.
கடந்த மாா்ச் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ மிக அதிகமாக ரூ.25,330.97 கோடி ஏஜிஆா் வருவாய் ஈட்டியது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட 10.21 சதவீதம் அதிகம்.
அதற்கு அடுத்தபடியாக பாா்தி ஏா்டெல்லின் ஏஜிஆா் மாா்ச் காலாண்டில் 13.25 சதவீதம் அதிகரித்து ரூ.20,951.91 கோடியாக உள்ளது.
இழப்பைச் சந்தித்துவரும் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் ஏஜிஆா் வருவாய் கடந்த மாா்ச் காலாண்டில் 2.22 சதவீதம் அதிகரித்து ரூ.7,370.75 கோடியாக உள்ளது.
அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் ஏஜிஆா் வருவாய் முறையே 4.41 சதவீதம் சரிந்து ரூ.1991.61 கோடியாகவும் 13.78 சதவீதம் சரிந்து ரூ.156.61 கோடியாகவும் உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

