
டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து, அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் பரிசுத் தொகையை வேண்டாம் என்று மறுத்துவிட்ட நிலையில், இதனால்தான் உங்களை வழிகாட்டி என்கிறோம் என்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா புகழாரம் சூட்டியிருக்கிறார்.
ஐசிசியின் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கும், தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுக்கும் ஆனந்த் மஹிந்திரா தனது பாராட்டுகளை தன்னுடைய எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதாவது, ஐசிசியின் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியிருந்த நிலையில், இந்திய அணிக்கு ஐசிசி ரூ.21 கோடி பரிசுத் தொகை வழங்கியிருந்தது.
பிசிசிஐ ஒட்டுமொத்தமாக ரூ.125 கோடி ரொக்கப் பரிசு அறிவித்திருந்தது. மகாராஷ்டிர அரசும் ரூ.11 கோடி ரொக்கப் பரிசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பிசிசிஐ அறிவித்த ரூ.125 கோடியில், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ.5 கோடியாக பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், டிராவிட், மற்ற பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.2.5 கோடியே போதுமானது என்று கூறி, அதிகப்படியான பரிசுத் தொகையை நிராகரித்துவிட்டார்.
இது குறித்து ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், இதுதான் ஒரு மனிதனின் அடையாளம்... இதனால்தான் உங்களை வாழ்வின் வழிகாட்டி என்கிறார்கள் என்று டிராவிட்டைப் புகழ்ந்துள்ளார்.
அதுமட்டுமா, ராகுல் டிராவிட்டின் இந்த முடிவு குறித்து செய்திகள் வெளியானதும், சமூக ஊடகம் முழுக்க அவருக்கு பாராட்டு மழைப் பொழிந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.