மணிக்கூண்டுக்காக அகற்றப்பட்ட மகாத்மா காந்தி சிலை! மக்கள் போராட்டம்! தெரியாது என்கிறார் முதல்வர்!

அசாமில் மணிக்கூண்டுக்காக காந்தி சிலை அகற்றப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறார் முதல்வர்.
மகாத்மா காந்தி சிலை
மகாத்மா காந்தி சிலை
Published on
Updated on
1 min read

அசாம் மாநிலத்தின் டூம்டோமா நகரில் மணிக்கூண்டுக்காக மகாத்மா காந்தி சிலை அகற்றப்பட்டது குறித்து தனக்கு தெரியாது என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், மணிக்கூண்டு கட்டுவதற்காக காந்தி சிலை அகற்றப்படுவது குறித்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாவட்ட நிர்வாகம் எடுத்திருக்கும் இந்த முடிவு குறித்து தனக்கு தெரியாது. உண்மை நிலவரம் என்ன என்று விசாரிக்கிறேன் என பதிலளித்திருப்பதோடு அசாம் மாநிலம், மகாத்மா காந்திக்கு அதிகம் கடன்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, அசாம் மாநிலத்தை பாகிஸ்தானுடன் இணைப்பதாக எழுந்த பிரச்னையின்போது, பாரத ரத்னா கோபிநாத் போர்டோலோய் உடன் மகாத்மா காந்தி உறுதுணையாக நின்றுள்ளார் என்றும் முதல்வர் பதிவிட்டுள்ளார்.

அசாம் மாநிலம் டூம்டோமா நகரில், மணிக்கூண்டு கட்டுவதற்காக, மகாத்மா காந்தி சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு, அது பற்றி தனக்குத் தெரியாது என்றும், உண்மை நிலவரம் என்ன என்று விசாரிப்பதாகவும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருக்கிறார்.

மகாத்மா காந்தி சிலை இருந்த இடத்தில் மணிக்கூண்டு அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக, அதனை நகராட்சி நிர்வாகம் புதன்கிழமை அகற்றியது. ஆனால் இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, டூம்டோடா எம்எல்ஏ ரூபேஷ் கோவாலா, அதே இடத்தில் மிக உயரமான மகாத்மா காந்தி சிலை நிறுவப்படும் என்று மக்களுக்கு உறுதி அளித்திருந்தார்.

இது குறித்து பாஜக எம்எல்ஏ கூறுகையில், ஏற்கனவே இருந்த மகாத்மா காந்தி சிலை பாழடைந்துவிட்டது. எனவே, அது அகற்றப்பட்டு, அங்கு ஆறு மாதத்தில் புதிய சிலை அமைக்கப்படும், அந்த இடமும் புனரமைக்கப்படும் என்றார்.

மகாத்மா காந்தி சிலையை தின்சுகியா நிர்வாகம் அகற்றும் பணி நடைபெற்றது குறித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களும் விடியோக்களும் பரவியதால் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், உள்ளூர் மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், முதல்வர் இந்த விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.

துஷார் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், அசாமில் பாஜக அரசு, காந்தியின் சிலையை அகற்றிவிட்டு மணிக்கூண்டு அமைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, அவர்களது அடிமைக் காலனித்துவப் போக்குதான் தற்போதும் நீடிக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com