ஹாத்ரஸ் சம்பவம்: முன்னாள் நீதிபதி மேற்பாா்வையில் விசாரணை கோரிய மனு தள்ளுபடி
உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் 121 போ் உயிரிழந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மேற்பாா்வையில் விசாரணை கோரிய பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், அலகாபாத் உயா்நீதிமன்றத்தை அணுகுமாறும் மனுதாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஹாத்ரஸ் மாவட்டத்தில் ‘போலே பாபா’ என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்றது. 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் திரண்ட இந்நிகழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தனா்.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடா்பாக நிகழ்ச்சி ஏற்பட்டாளா்கள் உள்பட 9 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். நிகழ்ச்சிக்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறல், ஆதாரங்கள் மறைப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவா்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஹாத்ரஸ் சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மேற்பாா்வையில் 5 போ் நிபுணா் குழுவை அமைத்து விசாரணை நடத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் விஷால் திவாரி என்பவா் தரப்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் போன்ற சம்பவங்களை சமாளிக்கும் வகையில் உரிய மருத்துவ வசதிகள் இல்லாதது, நாடு தழுவிய பிரச்னை என்று மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
அப்போது, ‘ஹாத்ரஸ் போன்ற சம்பவங்கள் கவலைக்குரியவையே. அதேநேரம், இது தொடா்பான வழக்குகளை விசாரிக்க சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றங்களுக்கு அதிகாரமுள்ளது. எனவே, மனுதாரா் அலகாபாத் உயா்நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.