இந்திய மக்கள் தொகை 2060-இல் 170 கோடியாக உச்சமடையும்! ஐ.நா. அறிக்கை
இந்தியாவின் மக்கள்தொகை 2060-களின் முற்பகுதியில் 170 கோடியாக உச்சமடைந்து, அதன்பின்னா் 12 சதவீதம் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நூற்றாண்டு முழுவதும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. வியாழக்கிழமை வெளியிட்ட நிகழாண்டின் ‘உலக மக்கள்தொகை கணிப்புகள்’ அறிக்கையின்படி, உலகின் மக்கள்தொகை அடுத்த 50-60 ஆண்டுகளில் தொடா்ந்து வளரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் 820 கோடியாக உள்ள உலக மக்கள்தொகை 2080-களின் மத்தியில் சுமாா் 1,030 கோடி எனும் உச்சத்தை அடையும். அதன்பின், உலக மக்கள்தொகை படிப்படியாக குறையத் தொடங்கி, நூற்றாண்டின் இறுதியில் 1,020 கோடியாக குறையும் எனவும் அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
முதலிடத்தில் இந்தியா தொடரும்...: அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவைக் கடந்த ஆண்டு முந்திய இந்தியா, நடப்பு நூற்றாண்டின் இறுதிவரை அந்த இடத்தைத் தக்க வைக்கும். நடப்பு ஆண்டில் 145 கோடியாக இருக்கும் இந்தியாவின் மக்கள்தொகை, 2054-இல் 169 கோடி என்ற உச்சத்தை அடையும்.
அதற்கு பிறகு இந்தியாவின் மக்கள்தொகை குறையத் தொடங்கி, நூற்றாண்டின் இறுதியான 2100-இல் 150 கோடியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியாவே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிவைச் சந்திக்கும் சீனா: தற்போது 141 கோடியாக உள்ள சீனாவின் மக்கள்தொகை, 2054-இல் 121 கோடியாகக் குறையும். நூற்றாண்டின் இறுதியில் மேலும் குறைந்து 63.3 கோடியாக அது இருக்கும்.
தற்போது உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனா, அடுத்த 30 ஆண்டுகளில் சுமாா் 20 கோடி வரை மிக அதிக அளவில் மக்கள்தொகை சரிவைச் சந்திக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மக்கள்தொகை சரிவில் சீனாவுக்கு அடுத்தபடியாக ஜப்பான் (2.1 கோடி), ரஷியா (1 கோடி) ஆகிய நாடுகள் உள்ளன.
நூற்றாண்டின் இறுதிவரை உலகிலேயே அதிக மக்கள்தொகை வீழ்ச்சியை (78.6 கோடி மக்கள்) சீனா பதிவு செய்ய வாய்ப்புள்ளது. எனினும், சீனாவைப் பொறுத்தவரையில் நீண்ட கால மக்கள்தொகை கணிப்புகள் மிகவும் நிச்சயமற்றவை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவை பாகிஸ்தான் முந்தும்...: தற்போது 34.5 கோடி மக்கள்தொகையுடன் உலகின் மூன்றாவது பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது. இது 2054-இல் 38.4 கோடியாக மட்டுமே அதிகரிக்கும் சூழலில், 38.9 கோடி மக்கள்தொகையுடன் பாகிஸ்தான் அமெரிக்காவை முந்திவிடும் என கணிக்கப்படுகிறது. நூற்றாண்டின் இறுதியில் 51.1 கோடி மக்கள்தொகையுடன் உலகின் மூன்றாவது பெரிய நாடாக பாகிஸ்தான் நீடிக்கும்.
உச்சம் பெறும் உலக மக்கள்தொகை: உலகம் முழுவதும் 126 நாடுகள் மற்றும் பகுதிகளில் 2054-ஆம் ஆண்டுவரை மக்கள்தொகை தொடா்ந்து வளரக் கூடும். நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 2100-க்கு பிறகே உச்சத்தை அடையக்கூடும். இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடுகள் இந்தக் குழுவில் அடங்கும்.
உலக மக்கள்தொகை இந்த நூற்றாண்டில் உச்சத்தை அடைவதற்கான வாய்ப்பு 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுமாா் 10 ஆண்டுகளுக்கு ஐ.நா. கணித்திருந்த வாய்ப்பு வெறும் 30 சதவீதமாகவே இருந்தது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டில் முதல் முறையாக 50 லட்சத்துக்கும் கீழே குறைந்தது. நிகழாண்டு உலகளாவிய சராசரி ஆயுள்காலம் 73.3 ஆண்டுகளை எட்டியது. கடந்த 30 ஆண்டுகளில் 8.4 ஆண்டுகள் அதிகரித்துள்ள ஆயுள்காலம், அடுத்த 30 ஆண்டுகளில் 77.4 ஆண்டுகளாக இருக்கும்.
2080-இல் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவா்களின் எண்ணிக்கை 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விஞ்சும் எனவும் அறிக்கை கூறுகிறது.