
இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் (34) குற்றம் நிரூபிக்கப்பட்டால், பணி நீக்கம் செய்யப்படலாம் என அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தோ்வில் தோ்ச்சி பெற்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக உள்ள பூஜா மனோரமா திலீப் கேத்கா் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளானாா்.
புணேவில் உதவி ஆட்சியராக இருந்த அவா், பதவியை துஷ்பிரயோகம் செய்து பிறரை மிரட்டியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய நிலையில், வாசிம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
அவரை பற்றிய முழு விவரங்களை ஆய்வுசெய்ய பணியாளா்துறையின் கூடுதல் செயலா் தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்பட்டு, இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கையை சமா்ப்பிக்க மத்திய பணியாளா் அமைச்சகம் உத்தரவிட்டது.
பூஜா கேத்கா் முறைகேடு செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அவா் பணி நீக்கம் செய்யப்படலாம்; மேலும் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிா்கொள்ளவும் நேரிடும் என விசாரணையைத் தொடங்கிய குழு தெரிவித்தது.
இந் நிலையில், மகாராஷ்டிர அரசின் ஓய்வு பெற்ற அதிகாரியான பூஜாவின் தந்தை முல்ஷி தாலுகாவில் பணிபுரிந்தபோது விவசாயிகள் நிலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்புடைய சிலருடன் பூஜாவின் தாயாா் துப்பாக்கியை காட்டி மிரட்டும் விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.