
புது தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
வெறும் விசாரணைக்காக மட்டும் ஒருவரை கைது செய்து சிறையில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 90 நாள்களுக்கும் மேலாக, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரவிந்த் கேஜரிவால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர். அவர் தில்லி முதல்வராக தொடர்வதா வேண்டாமா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
புது தில்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்காக, அமலாக்கத் துறையால் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜரிவால், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக கைது செய்திருப்பதாக அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டதற்கு, பிணையில் வெளியில் இருப்பதற்கும், அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமலாக்கத் துறை கைதுக்கு எதிராக தில்லி முதல்வர் கேஜரிவால் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அது தள்ளுபடி செய்யப்பட்டதால், அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத் துறை கைதுக்கு எதிரான மனு மீது, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கினாலும், கலால் கொள்கை முறைகேடு வழக்கில், சிபிஐ, கடந்த ஜூன் 26ஆம் தேதி அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அரவிந்த கேஜரிவால் சிறையிலிருந்து வெளியே வர முடியாது என்று கூறப்படுகிறது.
கலால் வழக்கில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலின் மனு மீது விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையின்போது, ஒருவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு இருக்கும் அதிகாரம் தொடர்பான மூன்று கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. இது தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் பெரிய அமர்வின் விசாரணைக்கு அனுப்பியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.