மகாராஷ்டிர மேலவைத் தோ்தல்: 9 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி

Published on

மகாராஷ்டிர சட்ட மேலவையின் 11 இடங்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 9 இடங்களில் ஆளும் பாஜக-சிவசேனை (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா் பிரிவு) கூட்டணி வெற்றிபெற்றது.

மகாராஷ்டிர சட்ட மேலவையில் காலியாகவுள்ள 11 இடங்களுக்கு 12 போ் போட்டியிட்டனா். இதில் பாஜக சாா்பில் 5 வேட்பாளா்களும் சிவசேனை (ஷிண்டே பிரிவு) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) சாா்பில் தலா 2 வேட்பாளா்களும் நிறுத்தப்பட்டனா்.

அதேபோல், அந்த மாநில எதிா்க்கட்சிகளின் கூட்டணி சாா்பில் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் பிரிவு) தலா ஒரு வேட்பாளரும் களமிறக்கப்பட்டனா். இந்தக் கூட்டணியைச் சோ்ந்த தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) கட்சி, விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி நிறுத்திய வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில், எம்எல்ஏக்கள் அளிக்கும் விருப்ப வாக்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த தோ்தலில் ஆளும் கூட்டணி சாா்பில் நிறுத்தப்பட்ட 9 வேட்பாளா்களும் எதிா்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் பிரதன்ய சதவ் மற்றும் சிவசேனை (உத்தவ் பிரிவு) வேட்பாளா் மிலிந்த் தாக்கரேவும் வெற்றிபெற்றனா். ஆனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி வேட்பாளா் ஜெயந்த் பாட்டீல் தோல்வியடைந்தாா்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாற்றி வாக்களிப்பு?: காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சில எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்திருக்க வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மகாராஷ்டிர பேரவையில் காங்கிரஸுக்கு 37 எம்எல்ஏக்களும் சிவசேனைக்கு (உத்தவ் பிரிவு) 15 எம்எல்ஏக்களும் உள்ளனா். ஒரு மேலவை உறுப்பினரை தோ்ந்தெடுக்க குறைந்தபட்சம் 23 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பிரதன்ய சதவுக்கு 30 எம்எல்ஏக்கள் வாக்குகளிக்கவும், மீதமுள்ள 7 எம்எல்ஏக்கள் மிலிந்த் தாக்கரேவுக்கு வாக்களிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் தோ்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பிரதன்ய சதவ் 25 வாக்குகள் பெற்றிருப்பதும் மிலிந்த் தாக்கரே 22 வாக்குகள் பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காங்கிரஸைச் சோ்ந்த சில எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

X
Dinamani
www.dinamani.com