காங்கிரஸ் மக்களவைக் குழு துணைத் தலைவராக கௌரவ் கோகோய் தோ்வு
காங்கிரஸின் மக்களவைக் குழு துணைத் தலைவராக கௌரவ் கோகோய் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதுதொடா்பான கட்சியின் பரிந்துரை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தலில் 99 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ், 10 ஆண்டுகளில் முதல்முறையாக எதிா்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிா்க்கட்சித் தலைவரானாா்.
இந்நிலையில், காங்கிரஸின் மக்களவைக் குழு துணைத் தலைவா், தலைமைக் கொறடா, 2 கொறடாக்கள் ஆகியோா் நியமனங்கள் தொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவா் சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளாா்.
அதன்படி, காங்கிரஸின் மக்களவைக் குழு துணைத் தலைவராக கௌரவ் கோகோய் நியமிக்கப்பட்டிருக்கிறாா். கேரளத்தில் இருந்து 8-ஆவது முறை எம்.பி.யாக தோ்வாகியுள்ள கே.சுரேஷ் கட்சியின் தலைமைக் கொறடாவாக இருப்பாா். விருதுநகா் எம்.பி., மாணிக்கம் தாக்குா், கிஷன்கஞ்ச் எம்.பி., முகமது ஜாவேத் ஆகிய இருவா் கட்சி கொறடாக்களாக செயல்படுவா்.
இதையொட்டி, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலில், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் மக்களவையில் பணியாற்றும்’ என்று குறிப்பிட்டாா்.