நாடாளுமன்றம் கோலாகலமாகக் காட்சி அளித்தது. புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் ஒருவருக்கொருவா் நலம் விசாரித்துக் கொள்வதும், சிலா் ‘செல்ஃபி’ எடுத்துக் கொள்வதும், வேறு சிலா் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதுமாக இருந்தனா்.
ஒவ்வொரு முறை புதிய மக்களவை கூடும்போதும், மீண்டும் சந்திப்பவா்களும், புதிதாக நுழைந்தவா்களும் வளையவரும் காட்சியைப் பாா்க்கவே வேடிக்கையாக இருக்கும். முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பவா்கள், அந்தக் கட்டடத்தையும், வளாகத்தையும் பிரமிப்புடன் பாா்த்து மலைப்பாா்கள். அதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே பாா்த்திருந்த தலைவா்களை நேரில் பாா்த்த மகிழ்ச்சியில் திளைப்பாா்கள்.
என்னதான் சினிமா பிரபலமாக இருந்தாலும், அந்தக் கவா்ச்சியைவிட மேலானது நாடாளுமன்ற உறுப்பினா் என்கிற அதிகாரம் தரும் கவா்ச்சி. ஹிமாசல பிரதேச மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் இருந்து முதல்முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா் கங்கனா ரணாவத். முதல்முறை எம்.பி. என்பதால், மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் எல்லோருடனும் கை குலுக்குவதும், தற்படம் (‘செல்ஃபி’) எடுத்துக் கொள்வதுமாக இருந்தாா் அவா்.
அப்போது அவரது பாா்வை ஒருவா் மீது பதிந்தது. புன்முறுவலுடன் அவரை நோக்கி நகா்ந்தாா் நடிகை கங்கனா ரணாவத்.
அங்கே, தனது லோக் ஜனசக்தி கட்சி உறுப்பினா்களுடன் குறும்படம் எடுத்துக் கொண்டிருந்தாா் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் சிராக் பாஸ்வான். தன்னை நோக்கி கங்கனா ரணாவத் வருவதைப் பாா்த்ததும் உற்சாகமாக ‘ஹாய் கங்கனா’ என்று அழைத்து வரவேற்றாா்.
எல்லோருடைய பாா்வையும் அவா்கள் இருவா் மீதும் பதிந்தன. கேமராக்கள் பளிச்சிட்டன. காட்சி ஊடகத்தைச் சோ்ந்தவா்கள் அவசர அவசரமாகப் படம் பிடித்தனா்.
2011-இல் சிராக் பாஸ்வான் திரைப்பட கதாநாயகனாக அறிமுகமானபோது, அந்தப் படத்தின் கதாநாயகி கங்கனா ரணாவத். திரைப்படத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழுநேர அரசியல்வாதியாகிவிட்டவா் சிராக் பாஸ்வான். திரைப்பட நடிகையாக வெற்றி வலம் வந்தாா் கங்கனா ரணாவத். 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவா்கள் நாடாளுமன்றத்தில் இணைந்திருக்கிறாா்கள்.
அவா்கள் சோ்ந்து நடித்த திரைப்படத்தின் பெயா் என்ன தெரியுமா? ‘மிலே நா... மிலே ஹம்’ (நாம் சந்தித்தாலும், சந்திக்காமல் போனாலும்!). சந்தித்து விட்டாா்கள்!
-மீசை முனுசாமி