
ஒடிசா மாநிலம் புரியில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை (ரத்ன பண்டார்), திறக்கும்முன், சந்திரமுகி பாணியில், அங்கு பாம்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
46 ஆண்டுகளுக்குப் பிறகு பொக்கிஷ அறை திறக்கப்பட்டபோது, அதில் மிகப்பெரிய பாம்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பாம்புகள் பிடிக்கும் அமைப்பின் உதவியாளர்கள் 11 பேர் கோயில் வளாகத்தில் அவசர உதவிக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.
கோயிலின் பொக்கிஷ அறையிலிருந்து வித்தியாசமான சப்தங்கள் கேட்கும் என்று கூறப்பட்டு வந்த தகவலையும், பொக்கிஷ அறையை மிகப்பெரிய பாம்புகள் காவல் காப்பதாக கூறப்பட்டு வந்த வழக்கத்தையும் அடிப்படையாக வைத்து பாம்பு பிடிப்பவர்கள் அவசர உதவிக்காக வரவழைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், பொக்கிஷ அறையில் பாம்பு உள்ளிட்ட எந்த பூச்சி, விலங்குகளும் இல்லை எனறு புரி மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மூன்று பேர் கொண்ட குழு, பொக்கிஷ அணைக்கு வெளியே ஏதேனும் அவசரம் எனில் விரைந்து செல்ல தயாராக நிறுத்தப்பட்டிருந்தனர். அதுபோல, புரி மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், பாம்புக் கடிக்கான மருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததாம்.
பாம்பு பிடிப்பவர்களும், பாம்பு பிடிப்பதற்கான அனைத்து கருவிகளையும் தயாராக வைத்துக்கொண்டு கோயிலில் காத்திருந்தனர். ஆனால், பொக்கிஷ அறையை திறந்தபோது, அதில் பாம்பு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் நிம்மதி அடைந்ததாகக் கூறுகிறார்கள்.
இது மட்டுமல்லாமல், பொக்கிஷ அறை திறப்பவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்ற மூட நம்பிக்கையும் இருந்ததாகவும், 11 பேர் கொண்ட குழு பொக்கிஷ அறைக்குள் நுழைந்து அனைத்தையும் சோதனை செய்த நிலையில், அனைவரும் பத்திரமாக பணிகளை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை பொக்கிஷ அறையிலிருந்து வெளியே வந்தனர்.
46 ஆண்டுகளுக்குப் பிறகு பொக்கிஷ அறை திறக்கப்படுவதால், பல்வேறு எதிர்பார்ப்புகளும் ஆச்சரியத்துடனும் மக்கள் காத்திருந்தனர். கோயிலுக்கு வெளியேயும் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
ஹர ஹர மகாதேவா, ஜெய் ஜெகந்நாத் என பக்தர்களும் அர்ச்சகர்களும் கோஷங்களை எழுப்பி, பொக்கிஷ அறையை திறப்பதற்கு லோகநாதர் கோயிலிலிருந்து ஜெகந்நாதர் கோயிலுக்கு அனுமதி அளிப்பது போன்ற ஒரு மாலையைக் கொண்டுவந்து அணிவித்தனர்.
புரிய கோயில் பொக்கிஷ அறை இதற்கு முன்பு கடைசியாக 1978ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இப்போது மீண்டும் பொக்கிஷ அறை திறக்கப்பட்டுள்ளது.
பொக்கிஷ அறை, சிறப்பு சடங்குகள் செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.28 மணிக்கு திறக்கப்பட்டது. ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி, ஸ்ரீஜெகந்நாதர் கோயில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அரவிந்தபதி உள்ளிட்ட 11 பேர் அறைக்குள் சென்று ஆய்வு செய்தனர். பொக்கிஷ அறை, வெளியே உள்ளே என இரு அறைகளாக இருந்துள்ளது.
உள் அறையின் பூட்டுகளை கோயில் நிர்வாகத்திடம் இருந்த சாவிகளைக்கொண்டு திறக்க முடியாத நிலையில், பூட்டுகள் உடைக்கப்பட்டுத்தான் உள் அறைக்குள் அதிகாரிகள் சென்றுள்ளனர். அதிலிருக்கும் பொருள்கள் வெளியே கொண்டுவருவதற்கு தாமதமாகும் என்பதால், அந்தப்பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.