கேதார்நாத் கோவில்
கேதார்நாத் கோவில்ANI

தில்லியில் ஒரு கேதார்நாத் கோவில் கட்டுவதா? கடும் எதிர்ப்பு!

தில்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை கடந்த வாரம் நடைபெற்றது.
Published on

தில்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்ட நிலையில், மாநிலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

மேலும், மக்களின் நம்பிக்கையை கேலி செய்வதாக இந்நிகழ்வு இருப்பதாகவும், சநாதன தர்மம் மற்றும் வேதங்களை அவமதிக்கும் செயல் என்று உத்தரகண்ட் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

தில்லி புராரி பகுதியில் உள்ள ஹிராங்கியில் கேதர்நாத் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், கேதர்நாத் பெயரில் தில்லியில் கோவில் கட்டுவதற்கு ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார், அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் கூறியதாவது:

“12 ஜோதிர்லிங்கங்கள் இருக்கும் இடம்தான் கேதார்நாத். அது இமயமலையில் இருக்கும்போது, தில்லியில் எப்படி கட்டப்படும். இதில், அரசியல் காரணங்கள் உள்ளன. மத வழிபாட்டுத் தலங்களில் அரசியல்வாதிகள் நுழைகின்றனர்.

கேதர்நாத் கோவிலில் தங்க மோசடி நடந்துள்ளது. அந்த பிரச்னையை எழுப்பாமல், தற்போது தில்லியில் கேதர்நாத் கோவில் கட்டப்படுகிறதா? அங்கும் ஊழல் நடக்கும். கேதார்நாத் கோவிலில் 228 கிலோ தங்கம் காணவில்லை. விசாரணையும் நடத்தப்படவில்லை. இதற்கு யார் பொறுப்பு? தில்லி கேதார்நாத் கட்ட முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.

கேதார்நாத் கோவில்
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண்மணியின் கணவர்

மேலும், அயோத்தி கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது:

“12 ஜோதிர்லிங்கங்கள் இருக்கும் கேதர்நாத் உத்தரகண்டில் உள்ளது. இக்கோவிலுக்கு அதீத சக்தி உள்ளது. இந்த ஜோதிர்லிங்கத்தின் சக்திகள் ஒப்பிட முடியாதவை. எனவே, மக்கள் அங்கு செல்கிறார்கள். இதே பெயரில் தில்லியில் மற்றொரு கோவில் கட்டினால், 12 ஜோதிர்லிங்கம் அமைந்திருக்கும், இந்த கோவிலை போன்று ஆகாது.

கேதார்நாத் என்ற பெயரில் மற்றொரு கோவிலை உருவாக்குவது ஏற்புடையதல்ல, தில்லியில் கோவில் கட்ட வேண்டுமென்றால் அதற்கு வேறு பெயர் வைக்க வேண்டும். ஒரே ஒரு கேதார்நாத் கோவில்தான் உள்ளது, அது அப்படியேதான் இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புகளுக்கு பதிலளித்துள்ள கேதர்நாத் தாம் டிரஸ்ட்டின் தலைவர் சுரிந்தர் கூறியதாவது:

உத்தரகண்ட் அரசுக்கும் தில்லியில் கட்டப்படும் கேதர்நாத் கோவிலுக்கும் எவ்வித சம்மதமும் இல்லை. தில்லியில் கட்டப்படும் கோவில் ஸ்ரீ கேதார்நாத் தாம் கோவில், தில்லி என்ற அமைப்பால் கட்டப்படுகிறது. இந்த டிரஸ்ட்டில் உள்ளவர்களின் உதவியுடன் கட்டப்படுகிறது. எங்களின் அழைப்பின் பெயரில் உத்தரகண்ட் முதல்வர் பூமி பூஜை நிகழ்வில் கலந்து கொண்டார்.

பிரபலமான கோவில் பெயர்களில் பல்வேறு நகரங்களில் ஏற்கெனவே கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தூரில் கேதார்நாத், மும்பையில் பத்ரிநாத் ஆகிய கோவில்கள் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்தால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com