
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த மின் தூக்கியில் சிக்கிய 59 வயது ரவீந்திரன் நாயர், 42 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டார். கடைசி வரை தான் நம்பிக்கையை விடவில்லை என்கிறார் தைரியத்துடன்.
வெளிச்சமோ, உணவோ, குடிநீரோ எதுவும் இன்றி, தான் மின் தூக்கியில் சிக்கியிருப்பது யாருக்காவது தெரிந்திருக்குமா என்பதும் தெரியாமல், 42 மணி நேரம் உயிரைக் கையில் பிடித்தபடி இருந்த ரவீந்திர நாயர், கடைசி வரை தான் நம்பிக்கையோடு இருந்ததாகக் கூறுகிறார்.
இந்த 42 மணி நேரத்தைப் பற்றி அவர் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில், உங்கள் கண் முன்னே மரணத்தைப் பார்ப்பதற்கு ஒப்பாக இருந்தது, யாராக இருந்தாலும் அவர்களது குடும்பத்தினர்தான் நினைவுக்கு வருவார்கள். நான் அவர்களை நினைத்து பயங்கரமாக அழுதேன் என்கிறார் ரவீந்திர நாயர்.
நான் என் குடும்பத்தை நினைத்து அழுதுகொண்டிருந்தாலும், மறுபக்கம், நான் உயிரோடு மீட்கப்படுவேன் என்றும், இதனைக் கடந்துவிடுவேன் என்றும் சொல்லிக்கொண்டே இருந்தேன் என்கிறார் தைரியத்துடன்.
மருத்துவமனைக்கு வந்த நாயர், மருத்துவரைப் பார்க்க யாருமே செல்லாத அந்த மின் தூக்கிக்குள் நுழைந்தார். கால் பிரச்னையால் தன்னால் படிகட்டுகளில் ஏறிச் செல்ல முடியாது என்று அவர் நினைத்தார்.
நான் உள்ளே நுழைந்ததும், கதவுகள் மூடியதும், மின் தூக்கி மேலே செல்வதற்கு பதில் பயங்கர வேகத்துடன் கீழே சென்று விழுந்தது. அதில் எனது கையில் இருந்த செல்ஃபோனும் உடைந்துவிட்டது. நான் என்னைத் தற்காத்துக் கொள்ள எதுவும் இல்லை. முழுக்க இருண்டுவிட்டது. நான் சிக்கியதுமே சிறிது நேரத்தில் வெளியே வந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன். வினாடிகள் மணி நேரங்களாகின. நான் சிக்கியிருப்பது கூட யாருக்கும் தெரியவில்லை. தொடர்ந்து அவசரகால பொத்தானை அழுத்திக்கொண்டே இருந்தேன். ஒரே ஒரு சிறிது துளையின் மூலம் காற்றும் லேசான ஒளியும் கிடைத்தது.
அந்த 42 மணி நேரமும் நான் நம்பிக்கையை மட்டும் விடாமல் காத்திருந்தேன். பிறகுதான் சிலர் லிஃப்ட்டை சரி செய்து, என்னை வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக நான் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்கிறார்.
சனிக்கிழமை மருத்துவமனைக்குச் சென்ற நாயர், திங்கள்கிழமை காலையில், லிஃப்ட் ஆபரேட்டர் வந்து லிஃப்ட்டை ஆபரேட் செய்து பார்த்தபோதுதான், அதற்குள் ஒருவர் சிக்கியிருக்கிறார் என்பதையே அறிந்து உடனடியாக உதவிக்கு அழைத்துள்ளார்.
அந்த லிஃப்ட் செயல்பாட்டில் இல்லை என்றும், பழுதாகியிருந்தது என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறினாலும், அதற்கான எந்த அறிவிப்புப் பலகையும் அங்கு வைக்கப்படவில்லை என்கிறார்கள் நாயர் மற்றும் அவரது குடும்பத்தினர்.
இத்தனை பேர் வரும் மருத்துவமனையில் இப்படி பழுதாகிப்போன லிஃப்டை ஏன் சரிசெய்யவில்லை என்றும் கேட்கிறார்கள். அவசரகால அழைப்பு ஏன் இயங்கவில்லை என கேள்வி எழுப்புகிறது நாயர் குடும்பம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.