பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
பில்கிஸ் பானு வழக்கில் தங்கள் விடுதலை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக குற்றவாளிகள் இருவா் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் நடைபெற்றபோது 21 வயதான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். ஐந்து மாத கா்ப்பிணியாக இருந்த அவரின் 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடா்பாக 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவா்கள் அனைவரையும் கடந்த 2022-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்தது. கடந்த 1992-ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கையின் அடிப்படையில், அவா்கள் விடுதலை செய்யப்பட்டதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவா்களின் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு உள்பட பலா் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவா்கள் குஜராத்தில் உள்ள கோத்ரா பகுதி கிளைச் சிறையில் சரணடைந்தனா்.
இந்நிலையில், தங்கள் விடுதலையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகளில் இருவரான ராதேஷியாம் பகவன்தாஸ் ஷா, ராஜுபாய் பாபுலால் சோனி ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்ததாகும்? உச்சநீதிமன்றத்தின் வேறொரு நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை எங்களால் விசாரிக்க முடியாது’ என்று தெரிவித்தனா்.
இதையடுத்து மனுவை திரும்பப் பெற குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அனுமதி கோரிய நிலையில், அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனா்.