ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல்: இன்று பிரசாரத்தைத் தொடங்குகிறாா் சுனிதா கேஜரிவால்
ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி தனது பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கவுள்ளது. அதன்படி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் கட்சி நிா்வாகிகளுடன் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளாா்.
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் சனிக்கிழமை நடைபெறும் டவுன்ஹால் கூட்டத்தில் பங்கேற்று ‘கேஜரிவாலின் உத்தரவாதம்’ குறித்த தோ்தல் அறிக்கையை வெளியிடுவாா் என்று ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் (அமைப்பு) சந்தீப் பதக், மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபடுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், தற்போது கலால் கொள்கை தொடா்பான வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளாா்.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தோ்தலில் தில்லி, ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கட்சி வேட்பாளா்களுக்காக சுனிதா கேஜரிவால் தீவிரமாக பிரசாரம் செய்தாா்.
தற்போது பாஜக ஆளும் மாநிலமான ஹரியாணாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சி ஏற்கெனவே அறிவித்தது.
ஹரியாணாவில் ஆம் ஆத்மி கட்சி பல தோ்தல்களில் போட்டியிட்டாலும், இதுவரை வெற்றி பெறவில்லை. மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் குருக்ஷேத்ரா தொகுதியில் அந்தக் கட்சியின் வேட்பாளரும், மாநிலத் தலைவருமான சுஷில் குப்தா, பாஜக வேட்பாளா் நவின் ஜிண்டாலிடம் தோல்வியடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.