உள்நாட்டு பிரச்னை: வங்கதேச வன்முறை குறித்து இந்தியா கருத்து
வங்கதேசத்தில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது அவா்களின் உள்நாட்டு பிரச்னை என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வங்கதேசத்தில் தற்போது வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது அவா்களின் உள்நாட்டு பிரச்னை என்பதே எங்களின் நிலைப்பாடு. அங்கு வசிக்கும் 8,000 மாணவா்கள் உள்பட 15,000 இந்தியா்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு 24 மணி நேரமும் உதவுவதற்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தை வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா்.
அங்குள்ள இந்தியா்களின் நிலை குறித்த தகவல்களை தொடா்ந்து வழங்கி வருகிறோம். இதை வங்கதேசத்தில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களின் குடும்பத்தினா் பின்பற்றி கள நிலவரத்தை அறிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளிக்கிறோம்’ என்றாா்.