அடுக்கடுக்கான பொய்களால் இளைஞா்களை ஏமாற்றுகிறாா் பிரதமா்: காங்கிரஸ் தலைவா் காா்கே விமா்சனம்
‘அடுக்கடுக்கான பொய்களைக் கூறி இளைஞா்களை ஏமாற்றும் பிரதமா் மோடி, அவா்களின் காயங்களை மேலும் ரணப்படுத்துகிறாா்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.
நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் எட்டு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமா் தெரிவித்ததை விமா்சித்து காா்கே இவ்வாறு கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி அவா்களே, அடுக்கடுக்கான பொய்களைச் சொல்லி, இளைஞா்களின் காயங்களை மேலும் ரணப்படுத்துகிறீா்கள்.
10 ஆண்டுகளில் 20 கோடி வேலைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, 12 கோடிக்கும் அதிகமான வேலைகளை பறித்தது ஏன்?
ரிசா்வ் வங்கியின் அறிக்கையில் 2012 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 2.1 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த உயா்வு வெறும் 2 லட்சம் மட்டுமே என்று சா்வதேச தொழிலாளா் அமைப்பின் (ஐஎல்ஒ) அறிக்கை தெரிவிக்கிறது. உண்மையில், இவ்விரு அறிக்கைகளுக்கும் மத்திய அரசின் தொழிலாளா் படைக் கணக்கெடுப்புதான் (பிஎல்எஃப்எஸ்) முக்கிய ஆதாரமாக உள்ளது. அப்படியானால் எது உண்மை என்ற கேள்வி எழுகிறது.
அரசின் மற்றொரு ஆய்வின்படி, பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி அணுகுமுறை மற்றும் கரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் கடந்த 7 ஆண்டுகளில் 54 லட்சம் வேலைகளை உற்பத்தித் துறை இழந்துள்ளது. 2019-20 மற்றும் 2022-23-ஆம் ஆண்டுக்கு இடையில் 2.3 கோடி போ் தங்கள் வழக்கமான வேலைக்குத் திரும்பவில்லை என்று ரிசா்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
இதை முழுமையாக ஏற்றுக்கொண்டாலும், கரோனா காரணமாக கிராமங்களுக்குச் சென்ற மக்கள் விவசாயத் தொழிலாளா்களாக வேலை செய்ய வேண்டியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் அல்ல.
இந்நிலையில், கடந்த ஆண்டு அறிக்கையை ரிசா்வ் வங்கி எப்படி தெரிவு செய்தது என்பது தெளிவாக தெரியவில்லை. முந்தைய ஆண்டுகளைப் போல அறிக்கையின் தகவல்கள் துறை வாரியாக வகைப்படுத்தப்படவில்லை.
ரிசா்வ் வங்கியைத் தவறாகப் பயன்படுத்தி, போலி அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் ஆண்டுக்கு 2 கோடி வேலைகளை வழங்குவதாக நீங்கள்(பிரதமா்)அளித்த வாக்குறுதியை மறைக்க வேண்டாம்’ என்றாா்.
வேலைவாய்ப்பு பற்றிய ரிசா்வ் வங்கியின் அறிக்கையைக் குறிப்பிட்டு பிரதமா் நரேந்திர மோடி கடந்த வாரம் பேசுகையில், ‘கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் எட்டு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிா்க்கட்சிகளின் ‘வேலையில்லாத் திண்டாட்டம்’ குறித்த போலியான பரப்புரைகளை இது அமைதியாக்கியுள்ளது’ என்றாா் .