ஐடி துறையில் பணி நேரம் 14 மணி நேரமாக அதிகரிப்பு? குமுறும் ஊழியர்கள்

ஐடி துறை ஊழியர்கள் தினசரி 14 மணி நேரம் பணிபுரிய கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள்..
ஐடி துறையில் பணி நேரம் 14 மணி நேரமாக அதிகரிப்பு? குமுறும் ஊழியர்கள்
படம் | ஏஎன்ஐ
Published on
Updated on
2 min read

ஐடி துறை ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கடந்தாண்டு கூறியிருந்தார். ’இந்திய இளைஞர்கள் இது நம்முடைய தேசம் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்து, உலக அரங்கில் இந்தியா போட்டியாக உருவெடுக்க வாரத்துக்கு 70 மணி நேரம் பணிபுரிய முன்வர வேண்டும்’ என அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அவரது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் ஐடி துறையில் பணி நேரத்தை 14 மணி நேரமாக அதிகரிக்க அனுமதியளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை கர்நாடக அரசிடம் முன் வைத்துள்ளன அம்மாநிலத்தில் செயல்படும் ஐடி நிறுவனங்கள்.

’கர்நாடக மாநில அரசு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1961-ஐ’ அமல்படுத்த முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில், இந்த சட்டத்தின்கீழ் தங்களது கோரிக்கையையும் இணைத்துக்கொள்ள ஐடி நிறுவனங்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளன. அதன்படி, ஐடி துறையில் தினசரி 12 மணி நேரம் வழக்கமான பணி நேரமாகவும், கூடுதலாக 2 மணி நேரம் பணிபுரியவும் அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஐடி துறை நிறுவனங்கள் தரப்பிலிருந்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவு அறிக்கையில், தகவல் தொடர்பு, மென்பொருள் மற்றும் அதன் இணை சேவைகள் துறைகளில்(ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ) பணிபுரிவோர் தினசரி 12 மணி நேரத்துக்கும் அதிகமாகவும், தொடர்ச்சியாக 3 மாதத்தில் 125 மணி நேரத்துக்கு மிகாமலும் பணிபுரிய அனுமதிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டத்தின்படி, பணியாளர்கள் தினசரி அதிகபட்சமாக 12 மணி நேரம் மட்டுமே வேலை செய்யலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கண்ட பரிசீலனை அதனை மீறுவதாய் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஐடி நிறுவனங்களின் கோரிக்கைகளை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், விரைவில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்படும் என ஐடி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், கர்நாடக மாநில ஐடி ஊழியர்கள் சங்கம்(கேஐடியு) மேற்கண்ட முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஐடி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், மேற்கண்ட பரிசீலனைகளை அமல்படுத்தினால் ஐடி நிறுவனங்கள் தினசரி 3 ஷிஃப்ட் முறைக்கு பதிலாக 2 ஷிஃப்ட் முறைக்கு மாறக்கூடும். இதன்காரணமாக, மூன்றில் ஒருபங்கு பணியாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளன.

கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபத்தை அதிகரிக்க ஏதுவாக செயல்படும் அரசு, பணியாளர்களை மனிதர்களாக கருதாமல் வெறுமனே இயந்திரங்களாக மட்டுமே கருதுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், தற்போதைய சூழலில் 45 சதவிகித ஐடி பணியாளர்கள் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு மனநலப் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், 55 சதவிகிதத்தினர் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கைகளைச் சுட்டிக்காட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஐடி நிறுவன கோரிக்கைகளை அமல்படுத்தக் கூடாதென கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com