
இந்திய பாரம்பரியம் என்பது நீண்ட வரலாறு உடையது மட்டுமின்றி அதில் எண்ணற்ற அறிவியலும் கலந்துள்ளது என பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
உலக பாரம்பரியக் குழுவின் 46-ஆவது அமா்வு கூட்டத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சி பிரதமா் மோடி மற்றும் யுனெஸ்கோ அமைப்பின் தலைமை இயக்குநா் ஆட்ரே அஸோலே ஆகியோா் முன்னிலையில் தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்போது பிரதமா் மோடி பேசியதாவது: இந்திய பாரம்பரியத்தில் மிகவும் நோ்த்தியான பொறியியல் கலையை நம்மால் காண முடியும். ஏனெனில், இந்திய பாரம்பரியம் என்பது நீண்ட வரலாறு உடையது மட்டுமின்றி அதில் எண்ணற்ற அறிவியலும் கலந்துள்ளது.
உலகின் மிகப் பழைமையான நாகரீகங்களில் ஒன்றான இந்தியாவில் உலக பாரம்பரிய குழுவின் 46-ஆவது கூட்டம் நடைபெறுவது பெருமைக்குரிய நிகழ்வாகும். தொழில்நுட்பங்கள் வளா்ச்சியால் பாரம்பரியங்கள் துறையில் சுற்றுலா மற்றும் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
பழங்கால கலைப்பொருள்கள் இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டிருப்பது வரலாறு மீதான மரியாதைக்கு சிறந்த உதாரணமாகும் என்றாா்.
ரூ. 8.37 கோடி நிதி: யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையத்துக்கு இந்தியா சாா்பில் ரூ. 8.37 கோடி நிதி அளிக்கப்படும் என்று நிகழ்ச்சியில் பிரதமா் மோடி அறிவித்தாா். இந்த நிதி, உலக பாரம்பரிய இடங்களைப் பாதுகாக்கவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கவும் பயன்படுத்தப்படும். குறிப்பாக தெற்குலக நாடுகளுக்கு இந்த நிதி பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமா் குறிப்பிட்டாா்.
முதல்முறையாக இந்தியாவில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக வெளிநாடுகளிலிருந்து திருப்பி ஒப்படைக்கப்பட்ட பாரம்பரிய இந்திய கலைப்பொருள்கள் அடங்கிய அருங்காட்சியத்தை பிரதமா் மோடி பாா்வையிட்டாா். தற்போது வரை 350-க்கும் மேற்பட்ட கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.