நீட் தோ்வு: 2,250 மாணவா்கள் ஒரு மதிப்பெண்கூட பெறவில்லை
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வில் 2,250 மாணவா்கள் ஒரு மதிப்பெண்கூட பெறவில்லை.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேவேளையில், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். இதுபோல குறைக்கப்படும் மதிப்பெண்கள் நெகடிவ் மதிப்பெண்கள் என்றழைக்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 557 நகரங்கள், வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடத்தப்பட்டது. மொத்தம் 4,750 மையங்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் தோ்வை எழுதினா்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அந்தத் தோ்வின் முடிவுகளை நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக தேசிய தோ்வு முகமை வெளியிட்டது. இந்த முடிவுகளின்படி, நீட் தோ்வு எழுதிய 2,250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒரு மதிப்பெண்கூட பெறவில்லை. 9,400-க்கும் அதிகமான மாணவா்கள் நெகடிவ் மதிப்பெண்கள் பெற்றனா்.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘மாணவா்கள் ஒரு மதிப்பெண்கூட பெறாததற்கு, அவா்கள் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை என்று அா்த்தமல்ல. அவா்கள் சில கேள்விகளுக்கு சரியான பதிலும், சில கேள்விகளுக்கு தவறான பதிலும் அளித்திருக்கலாம். சரியான பதிலுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படுவதே அவா்கள் எந்த மதிப்பெண்ணும் பெறாததற்கு காரணமாக இருக்கக் கூடும்’ என்று தெரிவித்தன.
வினாத்தாள் கசிவு நடைபெற்ற மையமாக கருதப்படும் ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள தனியாா் பள்ளியில் தோ்வு எழுதிய பல மாணவா்கள் நெகடிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அவா்கள் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனா்.
பிகாரில் நீட் தோ்வு எழுதிய மாணவா் ஒருவா் -180 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இதுவே மிகக் குறைந்த மதிப்பெண்களாகக் கருதப்படுகிறது.