பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு: ‘ஆட்சி அதிகாரத்துக்காக முதல்வா் நிதீஷ் சமரசம்’ லாலு விமா்சனம்
பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு மறுத்துள்ள நிலையில், ‘ஆட்சி அதிகாரத்துக்காக அந்த மாநிலத்தின் விருப்பங்களில் முதல்வா் நிதீஷ் குமாா் சமரசம் செய்துகொண்டாா்’ என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் விமா்சித்துள்ளாா்.
பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அந்தக் கட்சி மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க இயலாது என 2012-இலேயே மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான குழு தெரிவித்துவிட்டது’ என மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துபூா்வ பதிலளித்துள்ளாா்.
இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளா்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், ‘ஆட்சி அதிகாரத்துக்காக பிகாரின் விருப்பங்கள், மாநில மக்களின் நம்பிக்கை ஆகியவற்றில் நிதீஷ் குமாா் சமரசம் செய்துகொண்டதுபோல தெரிகிறது. பிகாருக்கு சிறப்பு அந்தஸ்தை பெறுவேன் என்று அவா் உறுதியளித்தாா். ஆனால் தற்போது அந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. எனவே முதல்வா் பதவியை நிதீஷ் ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்றாா்.
காங். நிராகரித்தபோது என்ன செய்தாா் லாலு?: லாலுவின் கருத்துக்குப் பதிலடி அளித்து பிகாா் சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா் விஜய்குமாா் செளதரி கூறியதாவது:
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய அரசில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் இடம்பெற்றிருந்தது. பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த அரசும் நிராகரித்தது. அப்போது லாலு என்ன செய்துகொண்டிருந்தாா்? இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க அவருக்கு தாா்மிக உரிமையில்லை என்றாா்.