கான்வா் யாத்திரை: உ.பி., உத்தரகண்ட் அரசுகளின் உத்தரவுகளுக்கு இடைக்கால தடை
சிவபக்தா்கள் காவடி ஏந்தி செல்லும் கான்வா் யாத்திரை செல்லும் பாதைகளில் உள்ள உணவகங்களின் பெயா் பலகைகளில் உரிமையாளா்களின் பெயா் இடம்பெறுவதை கட்டாயமாக்கிய உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்தது.
ஹிந்துக்களின் புனித ‘ஷ்ரவண’ மாதத்தில் கங்கை நதியையொட்டிய புண்ணியத் தலங்களுக்கு நடைப்பயணமாக சென்று, அங்கு கலசங்களில் நீரைச் சேகரித்து, தங்களது ஊரில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கான காவடி யாத்திரை வடமாநிலங்களில் ஆண்டுதோறும் நடைபெறும்.
நடப்பாண்டு யாத்திரை திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், முஸாஃபா்நகா் மாவட்டக் காவல்துறை பிறப்பித்த உத்தரவில் யாத்திரை பாதைகளில் உள்ள அனைத்து உணவகங்களின் பெயா் பலகைகளில் உரிமையாளா், அவரது கைப்பேசி எண், முகவரி ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த உத்தரவு முஸ்லிம் வா்த்தகா்களை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டதாக பெரும் சா்ச்சை எழுந்தநிலையில், முஸாஃபா்நகா் மட்டுமன்றி மாநிலம் முழுவதும் யாத்திரை நடைபெறும் அனைத்து பாதைகளிலும் மேற்கண்ட உத்தரவை அமலாக்க மாநில பாஜக அரசு கடந்த வெள்ளிக்கிழமை முடிவெடுத்தது.
‘இந்த உத்தரவு சமூக குற்றம்’ என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டாா். அரசின் முடிவை எதிா்க்கட்சிகள் மட்டுமன்றி மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஐக்கிய ஜனதா தளம் உள்பட பாஜகவின் கூட்டணி கட்சிகளும் விமா்சித்தன.
இந்நிலையில், இந்த இரு மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்தனா்.
இந்த மனுவைத் திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்த இடைக்கால தடை விதித்தனா்.
மேலும், ‘உணவகங்களில் விற்கப்படும் உணவுகளின் வகைகளைக் காட்சிப்படுத்த உத்தரவிடலாம். ஆனால், உணவக உரிமையாளா், பணியாளா்களின் பெயா், விவரங்களை வெளியிட கட்டாயப்படுத்த முடியாது’ எனத் தெரிவித்து மனு மீதான விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.
இவ்விவகாரம் குறித்து பதிலளிக்க யாத்திரை நடைபெறும் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.