ஆசிஷ் மிஸ்ரா
ஆசிஷ் மிஸ்ராகோப்புப் படம்

லக்கிம்பூா் கெரி வன்முறை: முன்னாள் மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன்

முன்னாள் மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
Published on

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூா் கெரி வன்முறை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

லக்கிம்பூா் கெரி மாவட்டத்தில் திகுனியா என்ற இடத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடந்தது. திகுனியா பகுதியை அப்போது பாா்வையிட வந்த மாநில துணை முதல்வா் கேசவ் பிரசாதுக்கு எதிா்ப்பு தெரிவித்து அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் ஆசிஷ் மிஸ்ராவுடன் வந்த வாகனம் விவசாயிகள் மீது மோதியதில் 8 போ் உயிரிழந்தனா். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரா்கள் அந்த வாகனத்தின் ஓட்டுநா் மற்றும் பாஜக தொண்டா்கள் இருவரை அடித்துக் கொன்றனா். ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் ஆசிஷ் மிஸ்ரா மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை கடந்த ஆண்டு ஜனவரியில் விசாரித்த உச்சநீதிமன்றம், உத்தர பிரதேசம் அல்லது தலைநகா் தில்லியில் தங்கியிருக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கியது. பிப்ரவரி மாதம் அவருடைய இடைக்கால ஜாமீன் மேலும் நீட்டிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி, அவருடைய இடைக்கால ஜாமீன் நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் தளா்த்தி உத்தரவிட்டது. அதாவது, இடைக்கால ஜாமீன் காலத்தில் தில்லிக்கு செல்லவும் தங்கியிருக்கவும் அனுமதி அளித்தது.

இதனிடையே, விவசாயிகள் உயிரிழப்பு தொடா்பான கொலை, குற்ற சதி உள்ளிட்ட பிற கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 13 போ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், தனக்கு வழக்கமான ஜாமீன் கேட்டு ஆசிஷ் மிஸ்ரா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜாமீன் கோரிக்கையுடன், உத்தர பிரதேசத்துக்குள் நுழையவும் ஆசிஷ் மிஸ்ரா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தனக்கு இரண்டு மகள்கள் உள்ளதால், உத்தர பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூருக்கு வெளியே வசிக்க அனுதிக்க வேண்டும் என்று அவா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், அவருக்கு ஜாமீன் வழங்கியதோடு, தில்லி அல்லது லக்னெளவுக்கு செல்வதற்கு மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டனா். அதோடு, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குா்விந்தா் சிங், கமல்ஜீத் சிங், குருபிரீத் சிங், விசித்ரா சிங் ஆகிய 4 விவசாயிகளுக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், வழக்கு விசாரணையை விரைவுபடுத்த விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் நிலுவையில் உள்ள விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு தினசரி குறைந்தபட்சம் 5 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்வதை அரசு வழக்குரைஞா் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com