நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை: மக்களவையில் தர்மேந்திர பிரதான்

நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை என மக்களவையில் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
Published on
Updated on
1 min read

புது தில்லி: நாடாளுமன்றத்தின் மக்களவையில் நீட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில், நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி அமர்வு முன்பு, நீட் விவகாரம் விசாரணையில் உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மக்களவையில் கேள்வி எழுப்பினார். பணமிருந்தால், தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்வு முறையே மிக்பெரிய மோசடி என மக்களவையில் நீட் விவகாரம் குறித்து ராகுல் காந்தி காட்டமாகப் பேசினார்.

நமது தேர்வு முறையில் மிகப்பெரிய பிரச்னை உள்ளன என்றும் ராகுல் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய தர்மேந்திர பிரதான், பொதுத் தேர்வு மசோதாவை முந்தைய காங்கிரஸ் அரசு ஏன் கொண்டுவரவில்லை? என்று கேள்வி எழுப்பியதோடு, தற்போது நடந்த சிறு சிறு பிழைகள் கூட இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முந்தைய காங்கிரஸ் அரசுதான் கல்வித்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர தவறிவிட்டது என்று பதிலளித்தார்.

காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை எங்கள் அரசு சரி செய்து வருகிறது என்றார் தர்மேந்திர பிரதான்.

தொடர்ந்து பேசிய தர்மேந்திர பிரதான், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி தேர்வு முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முறைகேட்டை நான் அரசியலாக்க விரும்பவில்லை, ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த போது எத்தனை முறை வினாத்தாள் முறைகேடு நடந்திருக்கிறது என்பதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது என்றார்.

மேலும், மக்களவையில் நீங்கள் கத்துவதால், அது உண்மையாகிவிடாது, நாட்டின் தேர்வு முறையே ஒரு மோசடி என்று கூறியிருக்கிறீர்கள், மக்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த மிக மோசமான தகவலில் இதுதான் மிக மோசமான பேச்சாக இருக்கும், இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.

மேலும், 2010ஆம் ஆண்டு கபில் சிபல், மூன்று சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தினார். தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை ஒரு சட்ட மசோதா தடுக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆனால், அதில் என்ன பிரச்னை இருந்தது? யாருடைய அழுத்தம் காரணமாக, அந்த மசோதா திரும்பப்பெறப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொடுத்த அழுத்தமா? ஆனால் தற்போது நீங்கள் எங்களைக் கேள்வி கேட்கிறீர்க என்று பிரதான் பதிலளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.