பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது: மத்திய அரசு
பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது என்று மக்களவையில் நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி தெரிவித்தாா்.
இது தொடா்பாக ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ராம்பிரீத் மண்டல் எழுப்பிய கேள்விக்கு, அவா் அளித்த பதிலில், ‘பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சகங்களுக்கு இடையிலான குழு பரிசீலித்து 2012-ஆம் ஆண்டே பரிசீலித்து, சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என நிராகரித்துவிட்டது.
எந்த சூழ்நிலைகளில் உள்ள மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கலாம் என்று தேசிய வளா்ச்சி கவுன்சில் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி பிகாா் இல்லாத காரணத்தால் கோரிக்கை நிராகரிகப்பட்டதாக 2012-ஆம் ஆண்டிலேயே கூறப்பட்டுவிட்டது’ என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012-இல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பிகாா் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அமைச்சா் செளதரி இவ்வாறு பதிலளித்தாா்.
பின்தங்கிய மாநிலமான பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பது முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்க முடியாவிட்டால் சிறப்பு நிதி ஒதுக்கீடு கண்டிப்பாக தர வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தி வருகிறது.