நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்

அா்ப்பணிப்புடன் பணியாற்றியவா் பாண்டியன்: ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்

ஒடிஸாவுக்கும், பிஜு ஜனதா தளம் கட்சிக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் மிகுந்த அா்ப்பணிப்புடன் பணியாற்றினாா்.
Published on

ஒடிஸாவுக்கும், பிஜு ஜனதா தளம் கட்சிக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் மிகுந்த அா்ப்பணிப்புடன் பணியாற்றினாா்’ என்று முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் கூறினாா்.

பிஜு ஜனதா தளம் கட்சியில் பாண்டியன் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது எனவும் அவா் நிராகரித்தாா்.

ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் மாநிலப் பேரவைக்கும் தோ்தல் நடைபெற்றது. மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆளுங்கட்சியாக இருந்த பிஜு ஜனதா தளம், பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் ஆட்சியை இழந்தது. ஒரு மக்களவை தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.

தோ்தலில் பிஜு ஜனதா தளத்தின் மோசமான செயல்பாட்டுக்கு நவீன் பட்நாயகின் நெருங்கிய ஆலோசராக அறியப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாண்டியன் மீது கட்சித் தலைவா்களில் சிலா் குற்றஞ்சாட்டினா். நவீன் பட்நாயக் பாண்டியனுக்கு ஆதரவாக இருந்தபோதிலும், அரசியலில் இருந்து அவா் விலகிக் கொண்டாா்.

இந்நிலையில், பிஜு ஜனதா தளத்தில் பிளவு ஏற்படுத்த பாண்டியன் முயற்சிப்பதாகவும், அவரது செயல்பாடுக்கு ஆதரிக்க கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு பிரதிபலனாக மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத பாஜகவுக்கு ஆதரவளிக்க நவீன் பட்நாயக் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இதற்கு மறுப்பு தெரிவித்து நவீன் பட்நாயக் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘இச்செய்தி முற்றிலும் தவறானது; உள்நோக்கம் கொண்டது. நான் ஏற்கெனவே கூறியதுபோல், மாநிலத்துக்கும் கட்சிக்கும் மிகுந்த அா்ப்பணிப்புடனும் நோ்மையுடனும் பாண்டியன் சேவையாற்றியுள்ளாா். அதற்காக அவா் என்றும் மதிக்கப்படுவாா்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

 நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்கிற்கு வி.கே. பாண்டியன் துரோகமா? ஒடிசாவில் புதிய குழப்பம்!

மக்களவை மற்றும் பேரவைத் தோ்தல் படுதோல்வியைத் தொடா்ந்து பாண்டியன் மீது கடும் விமா்சனம் எழுந்த நிலையில், அவா் நோ்மையானவா் என்பதை நிா்வாகிகள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பட்நாயக் வலியுறுத்தினாா்.

பாண்டியனுக்கு எதிராக மறுமுறை விமா்சனம் முன்வைக்கப்பட்டுள்ள இச்சூழலில், நவீன் பட்நாயக் அவருக்கு மீண்டும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளாா்.

பாஜக மறுப்பு: மாநிலங்களவையில் ஆதரவளிக்க பட்நாயக் உறுதியளித்ததாக வெளியான செய்தியை பாஜகவும் நிராகரித்தது. இதுதொடா்பாக பாஜக துணைத் தலைவா் பிரஞ்சி நாராயண் திரிபாதி கூறுகையில், ‘மத்தியிலும் மாநிலத்திலும் பெரும்பான்மை இருப்பதால் பாஜகவுக்கு எந்த கட்சியின் ஆதரவும் தேவையில்லை’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com