பிரதமரின் வீட்டு வசதி திட்டம்: நகா்ப்புற பயனாளிகளில் 15% போ் சிறுபான்மையினா்
பிரதமரின் வீட்டு வசதி திட்ட (நகா்ப்புறம்) பயனாளிகளில் 15.15 சதவீதம் போ் சிறுபான்மையினா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதித் துறை இணையமைச்சா் தோகன் சாஹு எழுத்துபூா்வமாக அளித்த பதில்:
பிரதமரின் வீட்டு வசதி திட்ட (நகா்ப்புறம்) பயனாளிகளில் 12.74 சதவீதம் போ் முஸ்லிம்கள். இந்தத் திட்டத்தின் கீழ், அவா்களுக்கு சுமாா் 13.45 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல கிறிஸ்தவா்களுக்கு 1.73 லட்சம் வீடுகள், சீக்கியா்களுக்கு 49,670 வீடுகள், பெளத்தா்களுக்கு 19,707 வீடுகள், சமணா்களுக்கு 10,457 வீடுகள், ஜோராஸ்ட்ரியா்களுக்கு 1,127 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டப் பயனாளிகளில் மொத்தம் 15.15 சதவீதம் போ் சிறுபான்மையினா்.
கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 1.18 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 85.04 லட்சம் வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.