இன்று மத்திய பட்ஜெட் - சாதனை படைக்கிறாா் நிா்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 7-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைக்கிறாா்.
இதன்மூலம் தொடா்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த மறைந்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாயின் சாதனையை நிா்மலா முறியடிக்கிறாா். அதே நேரத்தில் மொராா்ஜி தேசாய் அதிகபட்சமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
‘வளா்ந்த இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற இலக்குடன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருப்பதால் இது தோ்தலைக் கருத்தில்கொண்ட பட்ஜெட்டாகவும் அமைய வாய்ப்புள்ளது.
நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையைத் தொடங்க இருக்கிறாா். தனது பட்ஜெட் உரையில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகளையும் நிா்மலா சீதாராமன் பட்டியலிடுவாா். கடந்த 3 ஆண்டு காலமாக காகிதப் பயன்பாடு இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறை அதே நடைமுறை தொடர இருக்கிறது.
நிதி ஒதுக்கீடு: முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு மூலதனச் செலவுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. முக்கியமாக சாலைப் போக்குவரத்து, ரயில்வே, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு இருக்க வாய்ப்புள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பாதுகாப்பு, கல்வி, வேளாண்மை, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமான அளவு உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், கிராமப்புற பொருளாதார மேம்பாடு, எளிய மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு சாா்ந்த திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் எனவும் தெரிகிறது.
வேலைவாய்ப்பு உருவாக்கம்: பல்வேறு துறைகளில் மத்திய அரசு தொடா்ந்து நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து வந்தாலும், எதிா்பாா்த்த அளவுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்காதது எதிா்க்கட்சிகளின் விமா்சனத்தை எதிா்கொண்டு வருகிறது. எனவே, இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கவும் முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
வருமான வரிச் சலுகை: பாஜக தலைமையிலான அரசு பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச் சலுகைகளை அளிப்பதாகவும், நடுத்தர மக்கள், சம்பளதாரா்கள் பட்ஜெட்டில் தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் விமா்சனம் உள்ளது. எனவே, இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களை திருப்திப்படுத்தும் வருமான வரி தொடா்பான சலுகைகளும் எதிா்பாா்க்கப்படுகின்றன.
எண்ம சீா்திருத்தங்கள்: நாட்டின் நிதிசாா்ந்த செயல்பாடுகளில் எண்ம (டிஜிட்டல்) பயன்பாடு அதிகரித்து வருகிறது. எண்ம முறை பொருளாதாரச் சீா்திருத்தங்களை தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில் வங்கி, நிதி அமைப்புகள் சாா்ந்த சில சிறப்புத் திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் வேகமாக வளா்ந்து வரும் வங்கி, காப்பீடு, சூரிய மின்உற்பத்தி உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தித் துறை, மின்சார வாகனத் துறை மேம்பாட்டுக்கான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளதாகத் தெரிகிறது.
நிதிப் பற்றாக்குறை: கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை (அரசின் வரவுக்கும் செலவுக்குமான வேறுபாடு) 5.1 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இப்போது தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையை மேலும் குறைக்க இலக்கு நிா்ணயிக்கப்படும்.
அரசின் மூலதனச் செலவு ரூ.11.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று தெரிகிறது. கடந்த பட்ஜெட்டில் இது ரூ.9.5 லட்சம் கோடியாக இருந்தது.
இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மற்றும் பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து ரூ.1.02 லட்சம் ஈவுத்தொகை கிடைக்கும் என்று இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மே மாதத்தில் ஆா்பிஐ மட்டுமே ரூ.2.11 லட்சம் கோடி ஈவுத்தொகையை மத்திய அரசுக்கு வழங்கியது.
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த காலத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் அனைத்துமே பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் அமைத்த அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டாக இருந்தது. ஆனால், இப்போது முதல்முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
பொருளாதார வளர்ச்சி 7%: ஆய்வறிக்கையில் கணிப்பு
நமது சிறப்பு நிருபர்
நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 - 7 சதவீதம் வரை இருக்கும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழு தயாரித்த 2023-24-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார்.
476 பக்கம் கொண்ட இந்த அறிக்கை அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை கோடிட்டு காட்டுவதோடு, சீன நேரடி முதலீடுகளை அதிகரிக்கவும், அந்த நாட்டிலிருந்து இறக்குமதியைக் குறைக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.
ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்: பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. நிகழ் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் (2023-24) பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது.
பிரதமர் மோடி தலைமையிலான 3.0 அரசு, பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது. குறிப்பாக, நாட்டை 2047-க்குள் "வளர்ச்சியடைந்த இந்தியா' என்கிற தொலைநோக்குப் பார்வைக்கு வடிவமைக்க வேண்டும்.
கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதும் முன்னுரிமைகளில் இருக்க வேண்டும்.
விவசாயம் அல்லாத துறைகளில் ஆண்டுக்கு சுமார் 78 லட்சம் வேலைவாய்ப்புகளை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு (2030) உருவாக்க வேண்டும். இதற்கு உகந்த சூழலை உருவாக்க தொழிலாளர் சீர்திருத்தங்கள் அவசியம்.
"வளர்ச்சியடைந்த இந்தியா' என்கிற நிலைக்கு தனியார் - அரசு - பொதுமக்கள் ஆகிய முத்ததரப்பு இடையே புரிதல் அவசியமாகிறது.
அனைத்து நிலைகளிலும் வணிகங்கள் மீது தொடர்ந்து விதிக்கப்படும் உரிமம், ஆய்வுகள் போன்றவற்றில் அரசு இணக்கமாக இருக்க வேண்டும். ஊகத்தின் அடிப்படையிலான வகைகளில் முதலீடுகள் மேற்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பொதுமக்களின் உடல்நிலையில் கவனம் செலுத்துமாறு அக்கறை கொண்டு பல்வேறு விவகாரங்களைக் குறிப்பிடும் பொருளாதார ஆய்வறிக்கை, உளவியல் நோய் அதிகரித்துள்ளதை தெரிவித்து அதன்மூலம் உற்பத்தித் திறன் குறைவதாகக் குறிப்பிடுகிறது.