நாட்டின் முன்னேற்றத்திற்கானது அல்ல..மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்! -கார்கே விமர்சனம்

நாட்டின் முன்னேற்றத்திற்கானது அல்ல, மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் என காங்கிரஸ் மூத்த தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே  (கோப்புப்படம்)
மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மத்திய பட்ஜெட் நகலெடுக்கப்பட்டுள்ளது என்றும், இது நாட்டின் முன்னேற்றத்திற்கானது அல்ல, மோடி அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கானது என்று குற்றம் சாட்டினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் 7 ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ததன் மூலம் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “மத்திய பட்ஜெட் நகலெடுக்கப்பட்டுள்ளது, இது நாட்டின் முன்னேற்றத்திற்கானது அல்ல, மோடி அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கானது.

1. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் இளைஞர்களுக்காக குறைந்த அளவிலான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

2. விவசாயிகளுக்கான ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, இரட்டிப்பு வருமானம் அனைத்தும் தேர்தல் வாக்குறுதிகளில் மோசடியாக மாறியுள்ளது. கிராமப்புறங்களில் மக்களுக்கான ஊதியத்தை உயர்த்தும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.

3. தலித்துகள், ஆதிவாசி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கிராமப்புற ஏழை மக்களுக்காக காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் செயல்படுத்தப்பட்ட புரட்சிகரமான திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஏழை என்ற சொல் சுய முத்திரைக்கான ஒருவழிமுறையாக மாறிவிட்டது.

4. இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக எந்தத் திட்டமும் இல்லை.

5. அனைத்திற்கும் மாறாக பணவீக்கத்திற்கு ஆதரவாகவும், கஷ்டப்படும் ஏழை மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கி அதிகாரத்துவமிக்கவர்களிடம் கொடுக்கும்படி இருக்கிறது.

6. விவசாயம், சுகாதாரம், கல்வி, பொதுநலம் மற்றும் பழங்குடியினருக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டைவிட குறைவான பணம் செலவிடப்பட்டுள்ளது. இவை பாஜகவின் முன்னுரிமைகள் அல்ல. அதேபோல், மூலதனச் செலவினங்களுக்காக ரூ. 1 லட்சம் கோடி குறைவாக செலவிடப்பட்டுள்ளது, இதன்மூலம் வேலை வாய்ப்புகள் எப்படி அதிகரிக்கும்?.

7. நகர்ப்புற மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு, உள்கட்டமைப்பு, உற்பத்தி, குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், முதலீடு, மின்சார வாகனத் திட்டம் ஆகியவற்றில் கொள்கை, தொலைநோக்கு, மறுஆய்வு பற்றி மட்டுமே பேசப்படுகிறது. ஆனால், பெரிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

8. தினமும் ரயில் விபத்துகள் நடக்கின்றன. ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சாதாரணப் பயணிகள் சிரமப்படுகின்றனர். ஆனால், ரயில்வே பற்றி பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை.

9. மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி இந்த பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட ஐந்தாவது பட்ஜெட் இதுவாகும். இது அதிர்ச்சிகரமான தோல்வியாகும். இது ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும்.

10. மே 20, 2024 அன்று, மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் ​​மோடி ஒரு பேட்டியில், 'எங்களிடம் ஏற்கனவே 100 நாள் செயல் திட்டம் உள்ளது' என்று கூறினார்.

ஆனால், இந்த பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை, பொதுமக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் மட்டுமே பாஜக மும்முரமாக உள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com