3 குற்றவியல் சட்டங்கள்: 43,150 அதிகாரிகளுக்குப் பயிற்சி
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் தொடா்பாக 43,150 அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு பயிற்சி அளித்துள்ளது.
நாட்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்தச் சட்டங்கள் தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதில்:
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்கள் தொடா்பாக 43,150 அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கு காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு பயிற்சி அளித்துள்ளது.
இதேபோல அந்தச் சட்டங்கள் தொடா்பாக சிறைத் துறை, தடயவியல் துறையைச் சோ்ந்தவா்கள் உள்பட 8,40,465 அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பயிற்சி அளித்துள்ளன.
அந்தச் சட்டங்கள் தொடா்பாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க கடந்த பிப்.21-ஆம் தேதி முதல் 3 படிப்புகளை ஐகாட்-கா்மயோகி பாரத் வலைதளம் கற்பித்து வருகிறது. இந்தத் தளம் மூலம், 2,19,829 அதிகாரிகள் ஒரு படிப்பையும், 1,72,970 அதிகாரிகள் 3 படிப்புகளையும் நிறைவு செய்துள்ளனா் என்றாா்.