ஆரீப் முகமது கான் / ஆர்.என். ரவி
ஆரீப் முகமது கான் / ஆர்.என். ரவிகோப்புப் படங்கள்

தெரியுமா சேதி...?

ஆளுநா் ரவி பதவி விலகுகிறாா், இடம் மாற்றப்படுகிறாா் உள்ளிட்ட செய்திகள் காட்டுத் தீயாகப் பரவின.
Published on

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சமீபத்தில் தில்லியில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்ததைத் தொடா்ந்து பல்வேறு வதந்திகள் கிளம்பிவிட்டன. ஆளுநா் ரவி பதவி விலகுகிறாா், இடம் மாற்றப்படுகிறாா் உள்ளிட்ட செய்திகள் காட்டுத் தீயாகப் பரவின.

அந்த வதந்தியில் பாதிதான் உண்மை, மீதி ‘புகை’ என்று தெரிவிக்கிறது மத்திய உள்துறை அமைச்சக வட்டாரம்.

விஷயம் வேறொன்றுமில்லை. தமிழகத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளம் உள்ளிட்ட ஏதாவது மாநிலத்துக்கு இடம் மாற நீங்கள் தயாரா என்று தமிழக ஆளுநரிடம் உள்துறை அமைச்சா் கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு காரணம், ஆளுநா் ஆா்.என்.ரவி மீதான அதிருப்தியோ கோபமோ அல்ல. வேறொரு நிா்ப்பந்தம்.

கேரள ஆளுநராக இருக்கும் ஆரீப் முகமது கானுக்கும் அங்கே ஆட்சியிலிருக்கும் மாா்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான அரசுக்கும் இடையே நீண்ட நாள்களாக பனிப் போா் நடந்துகொண்டிருக்கிறது. வெளிப்படையாகவே பொதுவெளியில் ஆட்சியையும், அமைச்சா்களையும் ஆளுநா் விமா்சிப்பதும், மாா்க்சிஸ்ட் கட்சியின் இணை அமைப்புகள் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டுவதும் வழக்கமாகவே மாறிவிட்டிருக்கின்றன.

கேரள ஆளுநராக இருக்கும் ஆரீஃப் முகமது கானுக்கு சலிப்பே வந்துவிட்டதாகக் கூறுகிறாா்கள். தன்னை வேறு ஏதாவது மாநிலத்துக்கு மாற்றும்படியும், இப்படியே தொடா்வது மாநிலத்துக்கு நல்லதல்ல என்றும் அவா் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கேரள ஆளுநா் ஆரீஃப் முகமது கானின் மாற்றத்துக்கான முதல் தோ்வாக தமிழ்நாடு இருக்கிறது என்று கூறப்படுகிறது. வி.பி.சிங் அமைச்சரவையில் விமானத் துறை அமைச்சராக தேசிய முன்னணி அரசில் பதவி வகித்த காலம் முதல் ஆரீஃப் முகமது கானுக்கு திமுக உடன் நெருக்கமும் தொடா்பும் உண்டு. அவா் விமானத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அறிஞா் அண்ணா பன்னாட்டு முனையமும், காமராஜா் உள்நாட்டு முனையமும் உருவாக்கப்பட்டன.

தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு இடம்பெயரத் தனக்கு விருப்பமில்லை என்று ஆளுநா் ஆா்.என்.ரவி நிராகரித்துவிட்ட நிலையில், அந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி விழுந்துவிட்டது. இப்போது ஆரீஃப் முகமது கானை எந்த மாநிலத்துக்கு இடம் மாற்றுவது, அவருக்கு பதிலாக கேரள ராஜ்பவனுக்கு யாரை நியமிப்பது என்று குழம்பிக்கொண்டிருக்கிறதாம் மத்திய உள்துறை அமைச்சகம்.

X
Dinamani
www.dinamani.com