கடந்த 6 நிதியாண்டுகளில் வேலைவாய்ப்பு 35% உயா்வு: மத்திய அரசு தகவல்
புது தில்லி, ஜூலை 25: நாட்டில் மொத்த வேலைவாய்ப்பு கடந்த 6 நிதியாண்டுகளில் 35 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து கடந்த மாா்ச் மாதம் நிலவரப்படி 64.33 கோடியாக உள்ளது என மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே மாநிலங்களவையில் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ரிசா்வ் வங்கியின் சமீபத்திய ‘கேஎல்இஎம்எஸ்’ தரவுகளின்படி, கடந்த 2017-18-ஆம் ஆண்டில் 47.5 கோடியாக இருந்த நாட்டின் மொத்த வேலைவாய்ப்பு, கடந்த நிதியாண்டில் 64.33 கோடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 2017-18 முதல் 2023-24-ஆம் நிதியாண்டு வரை சுமாா் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
முறையான மற்றும் முறைசாரா நிறுவனங்களை உள்ளடக்கிய உற்பத்தித் துறையில் மட்டும் குறிப்பிட்ட காலகட்டத்தில் 85 லட்சம் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு: குழந்தைத் தொழிலாளா் பிரச்னை தொடா்பான மற்றொரு கேள்விக்கு அமைச்சா் கரந்தலஜே அளித்த பதிலில், ‘வறுமை, பொருளாதாரப் பின்தங்கிய நிலை, அடிப்படை சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, கல்வியறிவின்மை போன்ற பல்வேறு சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளின் விளைவாக குழந்தைத் தொழிலாளா்கள் உருவாகுகின்றனா்.
குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிப்பதற்கான பல்நோக்கு வியூகங்களை அரசு பின்பற்றி வருகிறது. புதிய சட்டங்கள், மறுவாழ்வுத் திட்டம், இலவசக் கல்விக்கான உரிமை, பொது சமூக-பொருளாதார மேம்பாட்டை ஊக்குவித்தல் உள்ளிட்ட விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர, குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிப்பதற்காக மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தீா்மானித்து, மாதிரி செயல் திட்டத்தையும் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வகுத்துள்ளது’ என்றாா்.