கனிம வளம்: மாநிலங்களுக்கு வரிவிதிப்பு அதிகாரம் - உச்சநீதிமன்றம் தீா்ப்பு
புது தில்லி, ஜூலை 25: ‘கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு சட்ட அதிகாரம் உள்ளது’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மேலும், கனிம வளம் நிறைந்த நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு மாநில அரசுக்கு வழங்கப்படும் உரிமத் தொகை (ராயல்டி) என்பது வரி கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
இதுவரை, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீது மத்திய அரசு பல கோடி ரூபாய் மதிப்பில் வரியை விதித்து வருவாய் ஈட்டி வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு, மத்திய அரசுக்குப் பெரும் பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.
அதே நேரம், கனிம வளங்கள் நிறைந்த ஜாா்க்கண்ட், ஒடிஸா போன்ற மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கும் தீா்ப்பாகவும் பாா்க்கப்படுகிறது.
தமிழக அரசுக்கும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான வழக்கில் இந்தத் தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி: தமிழகத்தில் சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்திருந்த இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், அதற்காக தமிழக அரசுக்கு உரிமத் தொகையைச் செலுத்தி வந்தது. இந்தச் சூழலில், உரிமத் தொகையுடன், கூடுதலாக ‘செஸ் (மத்திய கலால் மற்றும் சேவை வரி)’ வரியை தமிழக அரசு விதித்தது.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தையும், பின்னா் உச்சநீதிமன்றத்தையும் இந்தியா சிமென்ட்ஸ் அணுகியது. உரிமத் தொகை மீது வரி விதிப்பது என்பது மாநில அரசின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என சிமென்ட் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை கடந்த 1989-ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்ற ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்குச் சாதகமாகத் தீா்ப்பளித்தது. ‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் (எம்எம்டிஆா்ஏ) 1957-இன் கீழ், மத்திய அரசுக்கே முதன்மையான அதிகாரம் உள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் மாநில அரசு உரிமத் தொகையை மட்டுமே வசூலிக்க முடியும். மாறாக, கூடுதல் வரி எதையும் விதிக்க முடியாது. உரிமத் தொகை என்பது வரிதான் என தீா்ப்பில் அரசியல் சாசன அமா்வு குறிப்பிட்டது.
மாறுபட்ட தீா்ப்பு: இந்நிலையில், நிலம் மற்றும் சுரங்க நடவடிக்கைகள் மீது ‘செஸ்’ வரி விதிப்பது தொடா்பாக மேற்கு வங்க அரசுக்கும், கெசோரம் தொழில் நிறுவனத்துக்கும் இடையேயான வழக்கை கடந்த 2004-ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, மாறுபட்ட தீா்ப்பை அளித்தது.
அதாவது, ‘உச்சநீதிமன்றம் கடந்த 1989-இல் அளித்த தீா்ப்பில் ‘உரிமத் தொகை என்பது வரிதான்’ எனக் குறிப்பிடப்பட்டது தட்டச்சுப் பிழையாகும். அதை ‘உரிமத் தொகை மீது விதிக்கப்படும் செஸ் ஒரு வரி’ என்றுதான் வாசிக்க வேண்டும். எனவே, 1989-ஆம் ஆண்டு தீா்ப்பும் உரிமத் தொகை என்பது வரி அல்ல என்றே குறிப்பிட்டுள்ளது’ என்று தீா்ப்பளித்தது.
9 நீதிபதிகள் அமா்வு: அதன்பிறகு, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் 80-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், உரிமத் தொகை என்பதும் வரி வகையா அல்லது உச்சநீதிமன்றம் 1989-இல் அளித்த தீா்ப்பு பிழையுடன் உள்ளதா என்பதைத் தீா்மானிக்க, உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட பெரிய அமா்வுக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஹிரிகேஷ் ராய், அபய் எஸ்.ஓகா, ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சா்மா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசி, பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய 9 நீதிபதிகள் அமா்வில் தொடா்ந்து 8 நாள்களாக இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டது.
அப்போது, நிலம் மற்றும் கனிமங்கள் மீது வரி விதிக்க உரிமை உள்ளது என மாநிலங்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சுரங்க நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், ‘எம்எம்டிஆா்ஏ சட்டப்படி கனிமங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது’ என்று வாதிட்டன.
மாநிலங்களுக்கு அதிகாரம்: இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு மாறுபட்ட தீா்ப்பை 9 நீதிபதிகள் அமா்வு வழங்கியது. அதாவது, 8 நீதிபதிகள் ஒருமித்த தீா்ப்பையும், நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீா்ப்பையும் வழங்கினா்.
அமா்வின் 200 பக்க பெரும்பான்மை தீா்ப்பை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வாசித்தாா். ‘உரிமத் தொகை என்பது சுரங்கத்தைக் குத்தகைக்கு எடுப்பதால் குத்தகைதாரரால் மாநில அரசுக்கு வழங்கப்படும் ஒப்பந்தத்துக்கான தொகையாகும். அதை வரி விதிப்பாக கருத முடியாது. உரிமத் தொகை மற்றும் வாடகையை வரியாகக் கருத முடியாது. அந்த வகையில், ‘உரிமத் தொகையும் வரிதான்’ என்று 1989-ஆம் ஆண்டு இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பில் குறிப்பிட்டது தவறானது.
அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையின் 49-ஆவது ஷரத்தின்படி, நிலம் மற்றும் கட்டடங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு. அதுபோல, 50-ஆவது ஷரத்து, கனிம மேம்பாடு சட்டத்தின் மூலம் நாடாளுமன்றம் விதித்துள்ள வரம்புகளுக்கு உட்பட்டு, கனிமங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களை அனுமதிக்கிறது. 54-ஆவது ஷரத்தின்படி, கனிமங்ள் மீது வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை.
மேலும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீது வரி விதிப்பதிலிருந்து மாநிலங்களை எம்எம்டிஆா்ஏ சட்டம் கட்டுப்படுத்தாது. மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எந்தவொரு ஷரத்தும் எம்எம்டிஆா்ஏ சட்டத்தில் இடம்பெறவில்லை.
அந்த வகையில், சுரங்கங்கள், கனிமங்கள் மற்றும் கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு’ என்று தீா்ப்பை வாசித்தாா்.
‘கனிமங்கள் மற்றும் கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை’ என்று நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீா்ப்பை அளித்தாா். இருந்தபோதும், பெரும்பான்மை தீா்ப்பின் அடிப்படையில், மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமை நிலைநாட்டப்பட்டது.
முன் தேதியிட்டு நடைமுறை?: நீதிபதிகள் இந்தத் தீா்ப்பை அளித்த நிலையில், ‘மத்திய அரசு இதுவரை வசூலித்த வரியை மாநிலங்களுக்கு திரும்பச் செலுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று மாநிலங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அதற்கு, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா எதிா்ப்பு தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து, தீா்ப்பை எப்போதிலிருந்து நடைமுறைப்படுத்துவது என்பது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமாக பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அதுகுறித்து வரும் 31-ஆம் தேதி தீா்மானிக்கப்படும் என்றனா்.