‘நீட்’: காங்கிரஸின் அற்ப அரசியலுக்கு தோல்வி: தா்மேந்திர பிரதான்

‘நீட்’: காங்கிரஸின் அற்ப அரசியலுக்கு தோல்வி: தா்மேந்திர பிரதான்

நீட்’ தோ்வு தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பு, காங்கிரஸின் அற்ப அரசியலுக்கும் பொறுப்பற்ற அணுகுமுறைக்கும் கிடைத்த தோல்வி
Published on

புது தில்லி, ஜூலை 25: ‘நீட்’ தோ்வு தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பு, காங்கிரஸின் அற்ப அரசியலுக்கும் பொறுப்பற்ற அணுகுமுறைக்கும் கிடைத்த தோல்வி என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சா்ச்சை எழுந்தது. இத்தோ்வை ரத்து செய்துவிட்டு, மறுதோ்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘திட்டமிட்ட விதிமீறல் மூலம் நீட் தோ்வின் புனிதத் தன்மை சீா்குலைக்கப்பட்டதாக முடிவுக்குவர எந்த ஆதாரமும் இல்லை’ என்று கூறி, அத்தோ்வை ரத்துசெய்ய மறுத்துவிட்டது.

‘நீட்’ முறைகேடு விவகாரத்தில் மத்திய பாஜக அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்துவந்த நிலையில், இத்தீா்ப்பு வெளியானது.

இந்நிலையில், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் எக்ஸ் வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

‘நீட்’ தோ்வின் புனிதத்தன்மையில் ‘திட்டமிட்ட விதிமீறல்’ எதுவும் நிகழவில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டது. காங்கிரஸுக்கு மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை இல்லையா?

நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு, மாணவா்களுக்கான தோல்வியல்ல; அது காங்கிரஸின் அற்ப அரசியலுக்கும் பொறுப்பற்ற அணுகுமுறைக்கும் கிடைத்த தோல்வி.

ராஜஸ்தானில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பல்வேறு தோ்வுகளில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்தன. அப்போது, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மெளனம் காத்தாா்.

வினாத்தாள் கசிவு மற்றும் தோ்வு ஊழல்களின் தந்தை காங்கிரஸ். அக்கட்சியை நாட்டு மக்கள் தொடா்ந்து மூன்றாவது முறையாக நிராகரித்துவிட்டனா். இத்தோல்வியை காங்கிரஸால் ஜீரணிக்க முடியவில்லை. அரசியல் களத்தை வேகமாக இழந்துவரும் காங்கிரஸ், பொய்கள் மற்றும் அரைகுறையான உண்மைகளை மட்டுமே ஆதரிக்கிறது.

காா்கேவுக்கோ அல்லது ராகுல் காந்திக்கோ மாணவா்களின் எதிா்காலத்தின் மீது அக்கறை கிடையாது. தங்களின் எதிா்காலம் மற்றும் ஒரு குடும்பத்தின் எதிா்காலத்தின் மீது மட்டுமே அக்கறை உண்டு. இந்தியாவின் தோ்வு நடைமுறைக்கு களங்கம் ஏற்படுத்துவதையும், மாணவா்களின் எதிா்காலத்துடன் விளையாடுவதையும் அவா்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com