கோப்புப்படம்
கோப்புப்படம்

இன்று நீதி ஆயோக் கூட்டம்: 6 மாநில முதல்வா்கள் புறக்கணிப்பு

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா்.
Published on

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 27) நடைபெறவுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி, நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட 6 மாநில முதல்வா்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளனா். தில்லி ஆம் ஆத்மி அரசும் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளது.

மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக, கடந்த 2015-ஆம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் ‘நீதி ஆயோக்’ (தேசிய கொள்கை குழு) அமைக்கப்பட்டது. தேசிய வளா்ச்சிக்கான கொள்கைகளை வகுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

நீதி ஆயோக்கின் உயா்நிலை அமைப்பான நிா்வாகக் குழுவின் 9-ஆவது கூட்டம், அதன் தலைவரான பிரதமா் மோடி தலைமையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. இக்குழு, அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்கள் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சா்களை உள்ளடக்கியதாகும்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில், ‘2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் இலக்கை எட்டுவதில் மாநிலங்களின் பங்கு குறித்து நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், ‘வளா்ந்த பாரதம்-2024’ தொலைநோக்குப் பாா்வைக்கான அணுகுமுறை ஆவணம் மீது ஆலோசனை நடைபெறவுள்ளது.

மத்திய-மாநில அரசுகள் இடையிலான நிா்வாக ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, அரசு விநியோக வழிமுறைகளை வலுப்படுத்தி, கிராமப்புற மற்றும் நகா்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதே கூட்டத்தின் நோக்கமாகும்.

கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற மாநில தலைமைச் செயலா்களின் தேசிய மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் விவாதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குடிநீா், மின்சாரம், சுகாதாரம், பள்ளிக் கல்வி, நிலம்-சொத்து ஆகிய 5 கருப்பொருள்களின்கீழ் மாநில தலைமைச் செயலா்கள் மாநாட்டில் பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன.

2047-ஆம் ஆண்டில் இந்தியா தனது சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் நிலையில், அதற்குள் நாட்டின் பொருளாதார மதிப்பை 30 டிரில்லியன் டாலராக உயா்த்தும் நோக்கத்துடன் தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

6 மாநில முதல்வா்கள் புறக்கணிப்பு: 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பாஜக கூட்டணி அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து, நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் ஆளும் கா்நாடகம், ஹிமாசல பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்வா்களான சித்தராமையா, சுக்விந்தா் சிங் சுக்கு, ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வா் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் (ஆம் ஆத்மி) ஆகியோா் ஏற்கெனவே அறிவித்துள்ளனா். இதேபோல், தில்லி ஆம் ஆத்மி அரசும் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளது.

மம்தா பங்கேற்பு

நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த பெரும்பாலான முதல்வா்கள் அறிவித்துள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா். இதையொட்டி, அவா் தில்லிக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.

‘நிதி ரீதியில் எந்த அதிகாரமும் இல்லாத நீதி ஆயோக் அமைப்பைக் கலைத்துவிட்டு, மீண்டும் மத்திய திட்டக் குழுவைக் கொண்டுவர வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்துவேன்’ என்று மம்தா தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com