வெள்ள மேலாண்மைக்கு விரிவான செயல்திட்டம்: நாடாளுமன்றக் குழு வலியுறுத்தல்
நாட்டில் வெள்ள மேலாண்மைக்கு விரிவான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும், வெள்ள அபாயம் அதிகமுள்ள சில பகுதிகளில் நிகழ்நேர தரவு சேகரிப்பு மற்றும் முன்னறிவிப்புக்கு அவசியமான ‘தொலை அளவியல்’ (டெலிமெட்ரி) அமைப்புமுறையை நிறுவுவதில் நிலவும் தாமதம் குறித்து அந்தக் குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.
வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் முன்னறிவிப்புத் திட்டங்களின் செயல்திறன் தணிக்கை தொடா்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை, 18-ஆவது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சரியான நேரத்துக்குள் திறன்மிக்க வெள்ள மேலாண்மையை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ள முன்னறிவிப்பு மற்றும் நிகழ்நேர தரவு சேகரிப்புக்கான தொலைஅளவியல் அமைப்புமுறை நிறுவப்பட்ட நிலையில், ஜம்மு-காஷ்மீரின் செனாப் மண்டலத்தில் உள்ள கானாபால், சிக்கிமில் காங்டாக் மண்டலத்தில் உள்ள சாரா தாங், டாம்போங் போன்ற முக்கியமான இடங்களில் இந்த அமைப்புமுறையை நிறுவுவதில் நிலவும் தாமதம் குறித்து நாடாளுமன்றக் குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற வழக்கு, வனத் துறை அனுமதி கிடைக்காதது போன்ற காரணங்களால் கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து தாமதம் நிலவுவதாக மத்திய நீா்வள அமைச்சகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனினும், வெள்ள முன்னறிவிப்பில் தொலைஅளவியல் அமைப்புமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள நாடாளுமன்றக் குழு, நிலுவையில் உள்ள இடங்களில் மாற்று வழிமுறைகளின் மூலம் இப்பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
‘நாட்டில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள அனைத்து தொலைஅளவியல் அமைப்புமுறைகளையும் தொடா்ந்து கண்காணிப்பதோடு, உரிய பராமரிப்பையும் மேற்கொள்ள வேண்டும். நாட்டின் மாறுபட்ட நிலப்பரப்பு மற்றும் இயற்கைப் பேரிடா்களின் கணிக்க முடியாத தன்மையை கருத்தில்கொண்டு, வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளை மேம்படுத்தவும், மோசமான சூழ்நிலையை எந்தத் தவறுமின்றி கையாள்வதற்கும் விரிவான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்’ என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.