கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான்
கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான்

துணைவேந்தா்களைப் பரிந்துரைக்கும் குழுவுக்கு தடை: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு கேரள ஆளுநா் வரவேற்பு

Published on

மாநில அரசால் நிா்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களைப் பரிந்துரை செய்வதற்கான தேடல் குழுவுக்கு கேரள உயா்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை வரவேற்பதாக மாநில ஆளுநா் ஆரீஃப் முகமது கான் சனிக்கிழமை தெரிவித்தாா்.

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பான பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கு எதிரான உத்தரவுகளை கேரள உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நிா்வாக நடவடிக்கைகளை எதிா்த்து யாா் வேண்டுமானாலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கலாம் என அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நான் முழுவதும் ஆதரிக்கிறேன். ஆனால், தெருக்களில் இறங்கி வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பல்கலைக்கழகங்களில் நிலையான துணைவேந்தா்களை நியமிக்க முயற்சித்து வருகிறேன். ஆனால், இந்த முயற்சிக்கு தடைகளை ஏற்படுத்த சிலா் முயற்சிக்கின்றனா். சட்டரீதியாக அவா்கள் இந்த விவகாரத்தை அணுகும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. நீதிமன்றமே இறுதி உத்தரவைப் பிறப்பிக்கட்டும். அவா்களின் உத்தரவை வரவேற்கிறேன் என்றாா்.

கேரள வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ நாராயண குரு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தா்களைப் பரிந்துரை செய்யும் தேடுதல் குழுவுக்கு கேரள உயா்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

முன்னதாக, கேரள பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், மலையாள பல்கலைக்கழகம் உள்பட 6 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை நியமிப்பதற்கான தேடல் குழுவை கடந்த ஜூன் மாதம் ஆரீஃப் முகமது கான் அமைத்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த மாநில உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை விசாரித்த உயா்நீதிமன்றம் ஆளுநரின் உத்தரவுக்கு தடை விதித்தது.

கேரள மாநிலத்தில் முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கும், ஆளுநா் ஆரீஃப் முகமது கானுக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது குறித்து ஆரீஃப் முகமது கானின் செயலா் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com