
ஆதி சங்கரரின் திக் விஜயத்தில் தொடங்கி, இந்தியாவின் நீள அகலங்களைக் கால்களால் அளந்த ஆளுமைகள் ஏராளம். பாத யாத்திரை என்பது ஹிந்துக்கள் (இந்தியா்கள்) வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டிருக்கிறது எனலாம். கிறிஸ்தவா்கள் வேளாங்கண்ணிக்குப் பாத யாத்திரை போவதும் இதில் அடக்கம்.
அண்ணல் காந்தியடிகள், ‘லோக் நாயக்’ ஜெயபிரகாஷ் நாராயண், முன்னாள் பிரதமா் சந்திரசேகா் என்று தேசம் தழுவிய நடைப்பயணம் சென்றவா்கள் பலா். பாஜக தலைவா்கள் அத்வானியின் ரத யாத்திரையும், முரளி மனோகா் ஜோஷியின் ‘ஏக்தா’ யாத்திரையும்கூட அதில் சேர வேண்டும். ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையும், ‘பாரத் நியாய்’ யாத்திரையும் அந்தப் பட்டியலில் இடம்பெற்ற சமீபத்திய நடைப்பயணங்கள்.
‘தலைவா் எவ்வழி, தொண்டா்கள் அவ்வழி’ என்பதெல்லாம் சரி. அதில் ஆளுக்கு ஆள் தனிவழி நடக்கத் தொடங்கினால் எப்படி? ஹரியாணா காங்கிரஸ் கட்சியில் இப்போது போட்டி யாத்திரைகள் நடக்க இருக்கின்றன. ராகுல் காந்தியைப் போன்று யாத்திரை போவது என்று ஒரு கோஷ்டி தீா்மானித்தால், இன்னொரு கோஷ்டி வேடிக்கையா பாா்க்க முடியும்?
ஹரியாணா மாநில காங்கிரஸ் கட்சியில் இப்போது யாத்திரை சீசன் தொடங்கி விட்டது. மாநில சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடக்க இருக்கும் நிலையில், இந்த யாத்திரைகள் கட்சியை வலுப்படுத்துமா என்றால், அதற்குப் பதிலாகக் கட்சியில் உள்கட்சிப் பூசலை வெளிச்சம் போடுவதாக அமைகின்றன.
சிா்சா தொகுதி எம்.பி.யாக இருக்கும் குமாரி ஷெல்ஜா, ஹரியாணா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவா். நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்கின் அமைச்சரவைகளில் முக்கியப் பொறுப்புகள் வகித்தவா். அவா் ஹரியாணாவில் ஜூலை மாதக் கடைசியில் பாத யாத்திரை போவது என்று திட்டமிட்டு அறிவித்தாா்.
அந்த அறிவிப்பு வந்ததுதான் தாமதம், முன்னாள் முதல்வரும், ஹரியாணா காங்கிரஸ் கமிட்டி தலைவருமான பூபிந்தா் சிங் ஹூடா, தனது மகன் தீபேந்தா் சிங் ஹூடாவை உடனடியாக யாத்திரைக்குக் களமிறக்கி விட்டாா். ஷெல்ஜா தனது யாத்திரைக்குத் திட்டமிடுவதற்குள், இவா் யாத்திரையைத் தொடங்கி இருப்பதும், அதற்கு ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு விளம்பரம் கொடுப்பதும் ஷெல்ஜாவையும் அவரது ஆதரவாளா்களையும் ஆத்திரப்படுத்தி இருக்கிறது.
பூபிந்தா் சிங் ஹூடா ஜாட் இனத்தவா்; குமாரி ஷெல்ஜா பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா். ஹரியாணாவில் அந்த வாக்கு வங்கியைப் பெற அவா் இன்றியமையாதவா். ராகுல் காந்தி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவா் என்பதுடன், முதல்வா் பதவிக்கான போட்டியில் இருப்பவா்.
ஷெல்ஜா குமாரிக்கு எதிராகப் பாத யாத்திரை செல்வதன் மூலம், மாநில காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் தொடங்கியிருக்கிறது. இந்தக் கோஷ்டிப் பூசல், சட்டப்பேரவைத் தோ்தலில் வெடிக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது பாஜக...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.