ராணுவத்துக்கு நவீன வழிகாட்டும் கருவிகள்: சென்னை ‘பெல்’ நிறுவனத்திடம் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
ராணுவப் போா் வாகனங்களுக்கான நவீன வழிகாட்டு கருவிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படையின் பயன்பாட்டுக்கு 22 படகுகளைக் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் செயல்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் (பெல்) இருந்து போா் வாகனங்களுக்கான நவீன வழிகாட்டு கருவிகள் வாங்கப்படுகின்றன.
பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில்(டிஏசி) ஒப்புதல் அளித்த இத்திட்டங்களின் செலவினம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதுதொடா்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய ராணுவத்தின் போா் வாகனங்களுக்கான மேம்பட்ட நில வழிகாட்டு கருவியான ‘ஏஎல்என்எஸ் எம்.கே.-2’ வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னையில் செயல்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் இந்த தொழில்நுட்ப உபகரணங்கள், உள்நாட்டில் வடிவமைத்து, மேம்படுத்தப்பட்ட மற்றும் உற்பத்தியான தயாரிப்பு (ஐடிடிஎம்) பிரிவின்கீழ் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்திய கடலோர காவல்படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக 22 படகுகளை வாங்குவதற்கும் டிஏசி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடலோர கண்காணிப்பு மற்றும் ரோந்து, மருத்துவ வெளியேற்றம் உள்படதேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இந்த படகுகள் பயன்படுத்தப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.