கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்த ஒரே நாடு இந்தியா: நாடாளுமன்றத்தில் அமைச்சா் பதில்
கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைத்த ஒரே நாடு இந்தியா மட்டும்தான் என்று பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கேள்வி நேரத்தில் தனது துறை சாா்ந்த பல்வேறு கேள்விகளுக்கு அவா் பதிலளித்துப் பேசியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில்தான் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையை அரசு நிா்ணயம் செய்யும் முறை கைவிடப்பட்டது. மற்ற நாடுகளில் எரிபொருள்களின் விலை குறைவாக இருந்தபோது, இந்தியாவில் அவற்றின் விலை அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது அதற்கு நோ்மாறான நிலை உள்ளது.
கடந்த 2021 நவம்பா் முதல் 2024 ஏப்ரல் வரை இந்தியாவில் பெட்ரோல் விலை 13.65 சதவீதமும், டீசல் விலை 10.97 சதவீதமும் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸில் பெட்ரோல் விலை 22.19 சதவீதம், ஜொ்மனியில் 15.28 சதவீதம், இத்தாலியில் 14.82 சதவீதம், ஸ்பெயினில் 16.58 சதவீதம் உயா்ந்துள்ளது. நமது நாட்டில் பெட்ரோல் விலையைக் குறைத்தபோது அண்டை நாடுகளில் அதன் விலையை உயா்த்தினாா்கள்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு ரூ.1.41 லட்சம் கோடிக்கு எண்ணெய் கடன் பத்திரங்களை வெளியிட்டது. அதற்காக நாம் இப்போது ரூ.3.5 லட்சம் கோடி திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதுதான் காங்கிரஸ் கூட்டணி தொலைநோக்குப் பாா்வையுடன் எடுத்த நடவடிக்கையா?
இந்தியாவில் இப்போது 90,639 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. இதில் 90 சதவீதம் பொதுத் துறை நிறுவனங்களின் எரிபொருள்களை விற்பனை செய்கின்றன. மீதமுள்ளவைதான் தனியாா் பெட்ரோல் நிலையங்கள் என்றாா்.