முன்பதிவில்லா ரயில் பயணிகளுக்கு நரகமாக மாறிய பழைய ஏசி பெட்டிகள்!

முன்பதிவில்லா ரயில் பயணிகளுக்கு நரகமாக மாறிய பழைய ஏசி இருக்கை வசதிப் பெட்டிகள்!
முன்பதிவில்லா ரயில் பயணிகளுக்கு நரகமாக மாறிய பழைய ஏசி பெட்டிகள்!
Published on
Updated on
2 min read

பழைய குளிர்சாதன இருக்கை வசதிகொண்ட ரயில் பெட்டிகளை, விரைவு ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்றும் இந்திய ரயில்வேயின் திட்டம், பயணிகளுக்கு மிகப்பெரிய தொந்தரவாக மாறியிருக்கிறது.

குளிர்சாதன ரயில் பெட்டியாக பயன்படுத்த முடியாத பழைய ஏசி இருக்கை வசதிகொண்ட பெட்டிகளை எல்லாம், சாதாரண முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றி பயன்படுத்தி வருகிறது ரயில்வே.

அந்த வகையில், மைசூரு சூப்பர்ஃபாஸ்ட் மற்றும் லால்பாக் விரைவு ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளாக இணைக்கப்பட்ட பழைய ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள், போதிய காற்றோட்டம் இன்றி, கடுமையான வெப்பத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரயில் சென்றுகொண்டிருக்கிறதோ, நின்று கொண்டிருக்கிறதோ எதுவும் பெரிய மாற்றமில்லை என்கிறார்கள் பயணிகள்.

பழைய சாதாரண வகுப்பு ரயில் பெட்டிகள்பெரிய ஜன்னல்களைக் கொண்டிருக்கும். அதில் நல்ல காற்றோட்டம் இருக்கும். ஆனால், ஏசி இருக்கை வசதிப் பெட்டிகளில் ஜன்னல்களுக்கு பதில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள்தான் இருக்கின்றன. இதில் இரண்டு பக்கமும் சற்று இடைவெளிவிட்டு திறந்துவைத்தாலும் காற்று வருவதும் கடினம் என்பதால், கூட்டம் நிரம்பி வழியும்போது, மூச்சுவிடக் கூட முடியாமல் இருப்பதாக பயணிகள் புலம்புகிறார்கள்.

புதிய வகை எல்எச்பி ரயில் பெட்டிகளைக் காட்டிலும், பழைய ஐசிஎஃப் ரயில் பெட்டிகள் நல்ல காற்றோட்டம் கொண்டதாகஇருக்கும். அதிலும், பெரிய கண்ணாடி ஜன்னல் கொண்ட ஏசி இருக்கைவசதிகொண்ட பெட்டிகளில் காற்றோட்டத்துக்கான வழியே இருக்கவில்லை, ஒருவர் லால்பாக் விரைவு ரயிலுக்குள் ஏறிய 15 நிமிடங்களுக்குள் வியர்வை மழையில் நனைந்துவிடலாம், அதில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளின்நிலையும் இதுவே என்கிறார்கள் அடிக்கடி அதில் பயணிக்கும் பயணிகள் சிலர்.

கூட்டம் அதிகம் இருக்கும் வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறைக் காலங்களில், இதில் அதிக கூட்டத்துடன் பயணிக்கும்போது, பயணிகளுக்கு நரகமாக இருக்கும். சோளிங்கநல்லூர், வாலாஜா, முகுந்தபுரம் ரயில் நிலையங்களில் ஏராளமான கூட்டம் ஏறுகிறது, அப்போது, இருக்கைகளுக்கு இடையில் கூட மக்கள் நின்றுகொள்ளும் நிலை ஏற்படும்போது, அமர்ந்திருப்பவர்களால் மூச்சுவிடக் கூட முடியாமல் ஆகிறது என்கிறார்கள் பயணிகள்.

496 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கும் சென்னை - பெங்களூரு - மைசூரு விரைவு ரயில், அதிகம் பேர் பயணிக்கும், எப்போதும் டிக்கெட் விரைவாக விற்றுத்தீரும் ரயிலாக உள்ளது, இவ்வழித்தடத்தில் இரண்டு இன்டர்சிட்டி விரைவு ரயில்கள், ஒரு வந்தே பாரத், 2 சதாப்தி ரயில்கள், இரண்டு இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகின்றன. கூடுதலாக, பெரம்பூர் - பெங்களூரு இடையே ஐந்து முதல் ஆறு வாராந்திர ரயில்களும் இயக்கப்படுகின்றன.

ஆண்டு முழுவதும், லால்பாக் மற்றும் மைசூரு விரைவு ரயில்களில் 120 சதவீத பயணிகளுடன் பயணிக்கும். வார இறுதி மற்றும் விடுமுறை நாள்களில், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் இந்த ரயில்களில் பயணிப்பர்.

இது குறித்து வாலாஜாவைச் சேர்ந்த பயணி ஒருவர் கூறுகையில், பகல் நேரத்தில், வெப்பநிலை 37 டிகிரிக்கும் மேல் இருக்கும்போது, இந்த முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிப்பது என்பது கொடுங்கனவாக இருக்கும். அண்மையில், இதில் பயணித்தபோது, அப்படியொரு சொல்லொணாத் துயரத்தை நான் அனுபவித்தேன், இது முழுக்க முழுக்க சாதாரண வகுப்பு பயணிகளின் நலனில் ரயில்வே அக்கறை காட்டவில்லை என்பதையே காட்டுகிறது. பொது வகுப்புப் பெட்டிகளில் நிற்கக் கூட இடமில்லாத நிலையில்தான், பயணிகள் பலரும் முன்பதிவு செய்த பெட்டிகளுக்குச் சென்றுவிடுகிறார்கள்,

இது குறித்து சென்னை ரயில்வே மண்டல செய்தித் தொடர்பாளரிடம் கொண்டு செல்லப்பட்டபோது, இது குறித்து கவனம் செலுத்தப்படும், விரைவாக சிக்கல் சரிசெய்யப்படும் என்று பதில் கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com