
நவி மும்பையில் காணாமல் போயிருந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தின் நவி மும்பையில் உள்ள ஊரன் பகுதியில் 20 வயதான யஷ்ஸ்ரீ என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், கடந்த வியாழக்கிழமையில் (ஜூலை 25) தனது நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
ஆனால், இரவுநேரம் ஆகியும், யஷ்ஸ்ரீ வீட்டிற்கு வராததால், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, யஷ்ஸ்ரீயை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மறுநாள் (ஜூலை 26) அதிகாலையில், ரயில் நிலையம் அருகே ஒருவரின் சடலம் ரத்தவெள்ளத்தில் கிடப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சடலத்தை தெருநாய்கள் கடித்துக் குதறியிருந்ததால், அடையாளம் காண சிரமப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, உடலின் பல பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களும் கண்டறியப்பட்டது.
இருப்பினும், அந்த சடலம் யஷ்ஸ்ரீயின் சடலமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் யஷ்ஸ்ரீயின் பெற்றோருக்கு தகவல் அளித்து, அவர்களை வரவழைத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற யஷ்ஸ்ரீயின் பெற்றோர் சடலத்தின் ஆடை மற்றும் கையில் பச்சை குத்தப்பட்டிருப்பதைக் கண்டவுடன், யஷ்ஸ்ரீயின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.
யஷ்ஸ்ரீயின் பெற்றோரிடம், ``யார்மீதும் சந்தேகம் இருக்கிறதா?’’ என்று விசாரணை மேற்கொண்டதில், கர்நாடகத்தைச் சேர்ந்த ஷேக் என்பவர் மீது குற்றம் சாட்டினர்.
ஷேக் என்பவர் ஊரனில் டிரைவராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், யஷ்ஸ்ரீயை காதலித்து, முஸ்லிம் மதத்திற்கு மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாகக் கூறி, ஷேக் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்து, 2019ஆம் ஆண்டில் ஷேக் சிறை சென்றிருந்தார் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ஷேக்கை தொடர்புகொள்ள முயன்ற போதிலும், இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஷேக்கை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், யஷ்ஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையில் யஷ்ஸ்ரீ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தால், மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்த கொலை சம்பவத்தில் விசாரணை மேற்கொள்ள அதிக எண்ணிக்கையில் தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பாஜக முன்னாள் எம்.பி. கிரிட் சோமையா, எம்.எல்.ஏ. மகேஷ் பால்டி மற்றும் பலரும் கண்டனமும், யஷ்ஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.