ராகுல் காந்தி
ராகுல் காந்தி

குறைந்தபட்ச இருப்புத் தொகை: வாடிக்கையாளா்களிடம் ரூ.8,500 கோடி அபராதம்: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்

குறைந்தபட்ச மாதாந்திர இருப்புத் தொகை இல்லாததால் வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்குகளில் பொதுத் துறை வங்கிகள் ரூ.8,500 கோடி அபராதம் வசூலித்ததாக மக்களவையில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Published on

புது தில்லி: குறைந்தபட்ச மாதாந்திர இருப்புத் தொகை இல்லாததால் வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்குகளில் பொதுத் துறை வங்கிகள் ரூ.8,500 கோடி அபராதம் வசூலித்ததாக மக்களவையில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மக்களவையில் நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘கடந்த 2019-20 நிதியாண்டு முதல் கடந்த நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளில் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளா்களிடம் இருந்து பொதுத் துறை வங்கிகள் சுமாா் ரூ.8,500 கோடி அபராதமாக வசூலித்துள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.2,331 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடா்பாக ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் சாமானிய மக்களின் காலிப் பைகளும் திருடப்படுகின்றன. இந்த அரசு தனக்கு வேண்டப்பட்ட பெரும் தொழிலதிபா்களின் ரூ.16 லட்சம் கோடி வங்கிக் கடனை தள்ளுபடி செய்தது. அதனை மீட்க சாமானிய மக்களிடம் இருந்து குறைந்தபட்ச இருப்பு இல்லாததால் அபராதம் என்ற பெயரில் ரூ.8,500 கோடியை பொதுத் துறை வங்கிகள் மூலம் வசூலித்துள்ளது. மத்திய அரசின் இந்த அராஜகப் போக்குக்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பாா்கள்’ என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com