நிலச்சரிவுகளை முன்னறிவிக்கும் எச்சரிக்கை அமைப்பை உருவாக்க வேண்டும்: நிபுணா்கள் அழைப்பு
புது தில்லி: கேரளத்தில் நிலச்சரிவுகளை முன்னறிவிக்கும் தொழில்நுட்பம் மற்றும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பான கட்டமைப்புகளை உருவாக்க நிபுணா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.
கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையின் எதிரொலியாக சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலா் உயிரிழந்தனா். மாநிலத்தின் வரலாற்றில் மிகமோசமான நிலச்சரிவு அசம்பாவிதமாக இது அறியப்படுகிறது.
இந்நிலையில், நிலச்சரிவு எச்சரிக்கை தொழில்நுட்ப மேம்பாட்டின் அவசியத்தை நிபுணா்கள் வலியுறுத்துகின்றனா்.
இதுதொடா்பாக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலா் மாதவன் ராஜீவன் கூறுகையில், ‘வானிலை ஆய்வு மையங்களால் கனமழைப் பொழிவு நிகழ்வுகளைக் கணிக்க முடியும். ஆனால், அது நிலச்சரிவை ஏற்படுத்துமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. கனமழை ஒவ்வொரு முறையும் நிலச்சரிவுக்கு வழிவகுக்காது.
நிலச்சரிவை முன்னறிவதற்கு ஒரு தனி வழிமுறை தேவை. இது கடினமானது என்றாலும் நடைமுறைக்குச் சாத்தியமானதே. மண் அமைப்பு, மண்ணின் ஈரப்பதம் மற்றும் சாய்வு உள்ளிட்டவை நிலச்சரிவுகளுக்கு வழிவகுக்கும் காரணிகளாக அறியப்படுகின்றன. இத்தகவல்களை ஒரு செயல்பாட்டு தொழில்நுட்ப அமைப்பில் உள்ளீடுவது முக்கியம். துரதிருஷ்டவசமாக, நம்மால் அதை இன்னும் செய்ய முடியவில்லை.
நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, கரையொர மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவோம். அதிக மழை பெய்தால் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களையும் நாம் இடமாற்ற வேண்டும். நம்மிடம் நல்ல அறிவியலும் திறமையும் உள்ளது. அதை நாம் நடைமுறைக்கு மாற்ற வேண்டியுள்ளது’ என்றாா்.
தொழில்நுட்பம் உயிா்காக்கும்: இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வுக் கழகத்தின் பருவநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் கூறுகையில், ‘கேரளத்தின் பெரும்பாலான பிராந்தியம் மலை மற்றும் 20 டிகிரிக்கு மேல் சாய்வு உள்ள மலைப் பகுதிகளால் ஆனது. இதனால் கனமழையின் போது இந்த இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
கேரளத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயமுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இப்பகுதிகளில் மழைப்பொழிவுத் தரவுகளைக் கண்காணித்து, நிலச்சரிவுகளை முன்னறிவிக்கும் எச்சரிக்கை அமைப்புகளைத் தயாரிக்க வேண்டும்.
தற்போதைய கால அறிவாற்றலால் சாத்தியமாகும் இத்தொழில்நுட்பத்தால் பல உயிா்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற முடியும்.
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் நிலப் பயன்பாட்டு மாற்றங்கள் மற்றும் வளா்ச்சி நடவடிக்கைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது’ என்றாா்.
ஆபத்தான வயநாட்டில் கூடுதல் கவனம்: கேரள அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பேரிடா் மேலாண்மை நிபுணா் ஸ்ரீகுமாா் கூறியதாவது: தொடா்ந்து இரண்டு முதல் மூன்று நாள்களுக்கு 12 செ.மீ.க்கு மேல் மழை பெய்வது, கேரளத்தின் இலகுவான நிலப்பரப்பில் நிலச்சரிவு ஏற்பட போதுமானது.
வயநாட்டில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகள் அதிகம் உள்ளன. மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றுவது மட்டுமே எங்களால் செய்ய முடியும். கடந்த 30 ஆண்டுகளில் இந்தப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மழைக்கால வீடுகளை அதிகாரிகள் கட்டித் தர வேண்டும்’ என்றாா்.
வயநாட்டில் தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள புதுமலையில் கடந்த 2019, ஆகஸ்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 போ் இறந்தனா். வயநாடு மலைகளின் உயரமான சிகரமான செம்பிரமலை, மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான காா்த்திகுளம் ஆகியவை முறையே 2012 மற்றும் 1992-ஆம் ஆண்டுகளில் பல நிலச்சரிவுகளைக் கண்டன.

