தொழிலதிபர்களுக்கு ரூ. 16 லட்சம் கோடி தள்ளுபடி; ஏழைகளுக்கு ரூ. 8,500 கோடி அபராதம்: ராகுல்
தொழிலதிபர்களுக்கு ரூ. 16 லட்சம் கோடி தள்ளுபடி செய்த அரசு, குறைந்தபட்ச இருப்புத் தொகையைகூட பராமரிக்க முடியாத ஏழை இந்தியர்களிடம் இருந்து அபராதமாக ரூ.8,500 கோடி வசூலித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பொதுத் துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 8,495 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் எம்பிக்கள் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
இதனை விமர்சித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
“பிரதமர் மோடியின் அமிர்தகால் ஆட்சியில் சமானிய மக்களின் வெறும் பாக்கெட்டுகளும் விட்டு வைக்கப்படுவதில்லை.
தொழிலதிபர்களுக்கு ரூ. 16 லட்சம் கோடி தள்ளுபடி செய்த அரசு, குறைந்தபட்ச இருப்புத் தொகையைகூட பராமரிக்க முடியாத ஏழை இந்தியர்களிடம் இருந்து அபராதமாக ரூ.8,500 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
அபராதம் என்பது மோடியின் சக்கர வியூகத்தின் கதவு. இதன்மூலம் சாமானிய இந்தியனின் முதுகை உடைக்கும் முயற்சி நடைபெறுகிறது.
ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், இந்தியர்கள் அபிமன்யூ கிடையாது, அர்ஜுனர்கள். உங்களின் சக்கர வியூகத்தை உடைத்து ஒவ்வொரு அட்டூழியத்திற்கும் பதிலடி கொடுக்க அவர்களுக்கு தெரியும்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மக்களவையில் வயநாடு நிலச்சரிவு குறித்து ராகுல் பேசியதாவது:
“வயநாட்டில் அரங்கேறும் பேரழிவு வேதனை அளிக்கிறது. இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய அரசை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துகிறேன்.
நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நிலச்சரிவு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சூழலியல் ரீதியாக பலவீனமான பகுதிகளில் அதிகரித்து வரும் பேரிடர்களுக்கு தீர்வு காண்பதற்கான விரிவான செயல் திட்டமே காலத்தின் கட்டாயம்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.